காகிதமில்லா பட்ஜெட்டுக்கு அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா பாராட்டு தெரிவித்தார்.
மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் முதல் பட்ஜெட் கடந்த ஆகஸ்ட் 13ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. இதில், நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் நிதி நிலை பட்ஜெட் தாக்கல் செய்தார். இந்தநிலையில், இன்றைய கேள்வி நேரத்தில் தமிழ்நாடு அரசின் காகிதமில்லா பட்ஜெட்டுக்கு பாராட்டுக்கள் என கூறி அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா தனது பேச்சை தொடங்கினார். தொடர்ந்து பேசிய அவர், காகிதமில்லா பட்ஜெட்டை போல அரசின் அனைத்து நடவடிக்கைகளும் கணினிமயமாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
இதற்கு பதிலளித்து பேசிய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், புத்தக பயன்பாட்டைக் குறைக்கவே காகிதமில்லா பட்ஜெட் அறிமுகப்படுத்தப்பட்டதாகவும், இருந்தாலும் 400 பட்ஜெட் புத்தகங்கள் அச்சிடப்பட்டு தேவைப்படும் உறுப்பினர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டு வருவதாகவும் விளக்கமளித்தார். மேலும், மதுரையில் புதிதாக திறக்கப்பட உள்ள நூலகத்தில் புத்தகங்களுடன், டிஜிட்டல் புத்தகங்களும் இடம்பெறும் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பதிலளித்தார்.







