முக்கியச் செய்திகள் கட்டுரைகள்

பொருளாதாரத்தை மேம்படுத்த கதிசக்தி எனும் புதிய திட்டம்


ஆர்.கே.மணிகண்டன்

கட்டுரையாளர்

நாட்டின் தொழில் மற்றும் வேலைவாய்ப்பை அடுத்தகட்டத்திற்கு நகர்த்திச் செல்ல, கதிசக்தி என்னும் புதிய திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

உலக நாடுகளை வியப்பில் ஆழ்த்தும் வகையில், 100 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் “கதிசக்தி” என்னும் திட்டத்தை, பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். நாட்டின் கட்டமைப்பு, போக்குவரத்து வசதிகளை மேம்படுத்த, அடுத்த 25 ஆண்டுகளுக்கான பணிகளை இலக்காக கொண்டு, இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

கதிசக்தி என்றால் தமிழில் உத்வேகம் என்று அர்த்தம். இத்திட்டம் குறித்து டெல்லி செங்கோட்டையில், 75-வது ஆண்டு சுதந்திர தின உரையாற்றியபோது, பிரதமர் மோடி அறிவித்திருந்தார். அதன்படி டெல்லி பிரகதி மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பிரதமர் இத்திட்டத்தை தொடங்கி வைத்தார்.

தற்சார்பு இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த “உத்வேகம்” திட்டம், அடுத்த தலைமுறைக்கான வசதிகளை குறிவைத்து செயல்படுத்தப்பட உள்ளது. அந்தவகையில், ரயில்வே மற்றும் சாலை போக்குவரத்து உள்ளிட்ட 16 துறைகளைச் சேர்ந்த அமைச்சரவைப் பணிகளை ஒருங்கிணைக்கும் வகையில், பிரத்யேக இணையதளம் ஒன்று உருவாக்கப்பட உள்ளது. இத்திட்டத்திற்காக இஸ்ரோ உருவாக்கியுள்ள மென்பொருள் பயன்படுத்தப்பட உள்ளது. இதன்மூலம் செயற்கைக்கோள் புகைப்படங்கள் மூலம் திட்டத்தின் அன்றாடப் பணிகள் கண்காணிக்கப்படும், இதுகுறித்த தகவல்கள் பிரத்யேக இணையதளத்தில், அவ்வப்போது பதிவேற்றம் செய்யப்பட்டு ஆலோசிக்கப்படும்.

“கதிசக்தி” திட்டத்தின் கீழ், அடுத்த நிதியாண்டுக்குள், நாடு முழுவதும் 200 விமான நிலையங்கள், 2 லட்சம் கி.மீ. தேசிய நெடுஞ்சாலை, குழாய் கேஸ் சேவையை 35 ஆயிரம் கிலோ மீட்டராக அதிகரித்தல் போன்ற வசதிகள் கொண்டு வரப்பட உள்ளன. நாடு முழுவதும் 202 மீன்பிடி துறைமுகங்கள் மேம்படுத்தப்படும். நாட்டில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் 4-ஜி வசதி கொண்டு வரப்படும். ஜவுளி, பார்மசி மண்டலங்கள், ராணுவ வழித்தடங்கள், மின்னணு பூங்காக்கள், தொழில் வழித்தடங்கள், மீன்வள மற்றும் வேளாண் மண்டலங்கள் உள்ளிட்டவை, நாட்டின் பல்வேறு பகுதிகளில் புதிதாக அமைக்கப்படும். இதன் மூலம், சர்வதேச சந்தையில், சீனாவின் ஆதிக்கம் கட்டுப்படுத்தப்படும் என கருதப்படுகிறது.

மத்திய வர்த்தகத்துறையின் தலைமையில், இப்பணிகள் செயல்படுத்தப்பட்டாலும், கேபினட் செயலாளர் தலைமையிலான முக்கியத் துறைகளின் செயலாளர்களை கொண்ட குழு, இப்பணிகளை தினசரி கண்காணிக்கும். இத்தகைய ஒருங்கிணைந்த திட்டம் மூலம், இந்தியா உலகளவில் தொழில் மற்றும் முதலீட்டு துறையில், முதன்மையான இடத்தை கைப்பற்றும் என்றும், லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும், பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

உத்வேகம் திட்டத்தின் தொடக்க நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, உலகத்தரத்திலான இத்திட்டங்கள் நடைமுறைக்கு வந்தால், இந்தியா உலக வர்த்தகத்தின் தலைநகரம் ஆகும் என்றும், முதலீட்டு மையமாக மாறும் என்றும், பிரதமர் மோடி தனது உரையில் கோடிட்டு காட்டியுள்ளார். மேலும், முந்தைய காங்கிரஸ் ஆட்சி குறித்தும், பிரதமர் மோடி கடுமையாக சாடினார். வரி செலுத்துவோரின் பணம் வளர்ச்சித் திட்டங்களுக்கு முறையாக பயன்படுத்தப்படவில்லை என்றும், 1987-ல் மாநிலங்களுக்கு இடையே, தேசிய குழாய் கேஸ் திட்டம் செயல்படுத்தப்பட்டாலும், 27 ஆண்டுகளில் வெறும் 15 ஆயிரம் கிலோ மீட்டருக்கு மட்டுமே செயல்படுத்தப்பட்டதாகாவும், ஆனால் பாஜக ஆட்சிக்கு வந்தபிறகு, அதில் பாதியளவு காலத்திற்குள், 16 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் திட்டம் செயல்படுத்தப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

100 லட்சம் கோடி ரூபாய் என்பது, அரசு சார்பில் தற்போது செயல்படுத்தப்பட்டுள்ள, அடுத்து திட்டமிடப்பட்டுள்ள பணிகளை ஒருங்கிணைத்து, “உத்வேகத்தின்” கீழ் கொண்டு வரப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், இந்த நிதி நாட்டின் அடுத்தக்கட்ட வளர்ச்சிக்கு, பெரும் உத்வேகம் அளிக்கும், என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement:
SHARE

Related posts

ஊரடங்கு கசப்பு மருந்து என்றாலும் அருந்தியே ஆகவேண்டும்: முதல்வர்

Vandhana

இந்தியாவில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது: புதிதாக 31,443 மட்டும் பாதிப்பு

Vandhana

இலங்கை மீன்வளத்துறை அமைச்சருக்கு தமிழ்நாடு மீனவர்கள் கண்டனம்!

Gayathri Venkatesan