தருமபுரியில், மாவட்ட ஆட்சியர் அலுவலம் முன்பு மண்ணெண்ணெய் ஊற்றி, பெண் ஒருவர் தீக்குளிக்க முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்துள்ள வடக்கு தெரு கொட்டாவூர் பகுதியை சேர்ந்தவர் பச்சையம்மாள். திருமணமாகி கணவனை பிரிந்திருக்கும் இவர் ஃபேன்சி ஸ்டோர் ஒன்றை வைத்துள்ளார். இவர் தினமும் அரசு பேருந்தில் கடைக்கு சென்று வந்துள்ளார். அப்போது பாப்பாரப்பட்டி பகுதியை சேர்ந்த அரசு பேருந்து ஓட்டுநர் சீனிவாசனுக்கும், பச்சையம்மாளுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்நிலையில் சீனிவாசன், தனக்கு நிலப்பிரச்சனை உள்ளதாகவும் இதனை தீர்க்க பணம் தேவைப்படுவதாகவும் பச்சையம்மாளிடம் 1 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பணம் பெற்றுள்ளார்.
பணம் பெற்றுக்கொண்ட சீனிவாசன் பச்சையம்மாளுக்கு பணத்தை திருப்பி கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளார். அவரிடம் இருந்து பணத்தை பெற்று கொடுக்கக் கோரி கடந்த 6 ஆண்டுகளாக வாரா வாரம் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறை தீர்க்கும் முகாம் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடமும் மனு கொடுத்து நடையாய் நடந்துள்ளார் பச்சையம்மாள்.
ஆனால் 6 ஆண்டுகளாகியும் பச்சையம்மாவின் புகார் மனு மீது அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காத விரக்தியில் இன்று தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த பச்சையம்மாள், தான் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெய் கேனை எடுத்து அவர் உடல் மீது ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார். அப்போது அங்கிருந்த பெண் காவலர் மண்ணெண்ணெய் கேனை பிடுங்கி அவரது உடல் மீது தண்ணீரை ஊற்றி விசாரணைக்காக காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.







