நடிகர் விஜய்யின் மாஸ்டர் திரைப்பட ரீலீஸ் குறித்து படக்குழு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
நடிகர் விஜய் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடித்துள்ள திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தில், மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு பாக்கியராஜ், அர்ஜுன் தாஸ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இப்படத்தில் அனிருத் இசையில் உருவான பாடல்கள் அனைத்து ஏற்கனவே வெளியான நிலையில், படம் கடந்த ஏப்ரல் மாத வெளியீட்டிற்காக தயாராகி வந்தது. ஆனால் கொரோனா பாதிப்பு காரணமாக திரைத்துறை சம்பந்தமான அனைத்து பணிகளும் நிறுத்தப்பட்டதால் படத்தின் ரிலீஸ் பாதிக்கப்பட்டது.
இந்நிலையில் படத்தின் ரிலீஸ் குறித்து படக்குழு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ட்விட்டர் வீடியோ ஒன்றை படத்தின் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் மாஸ்டர் பட ரிலீஸ் குறித்து நாளை மதியம் 12.30 மணிக்கு முக்கிய அறிவிப்பு வெளியிடப்படும் என அறிவித்துள்ளது. மேலும் அதில் “ஒலிக்கும் பெயர் ஒன்று அரங்கமே அதிர வைக்கும்… தடுக்கும் காலம் தாண்டி அது பரவி நிற்கும்” என்று குறிப்பிடப்பட்டுள்ள வாசகம் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. அனேகமாக மாஸ்டர் திரைப்படம் ஜனவரி 13ம் தேதி வெளியாகும் என்றும் படத்தின் ட்ரெய்லர் புத்தாண்டையொட்டி வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.
இதனிடையே மாஸ்டர் பட ரிலீஸ் குறித்து நடிகர் விஜய் இன்று முதல்வர் பழனிசாமியை சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்போது அவர் மாஸ்டர் பட ரிலீஸின் போது தியேட்டர்களில் பார்வையாளர் அனுமதியை 50%-ல் இருந்து 100% ஆக உயர்த்த கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது.







