உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக ஆகஸ்ட் 26-ம் தேதி மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.
தமிழ்நாட்டில் 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சிகளுக்கு கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் 27 மற்றும் 28-ம் தேதிகளில் தேர்தல் நடந்தது. மாவட்டங்கள் பிரிப்பு காரணமாக நெல்லை, தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், வேலூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 9 மாவட்டங்களுக்கு தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது. அதன் பின் கடந்த 2020ம் ஆண்டு கொரோனா பரவல் தொடங்கியதால் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது.
தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாத ஒன்பது மாவட்டங்களில் செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாகவும், கட்சியின் அடுத்த கட்ட செயல்பாடுகள் தொடர்பாகவும் மநீம கட்சியின் மாவட்ட, மண்டல நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். ஆகஸ்ட் 26 ஆம் தேதி சென்னை ஆழ்வார்பேட்டை கட்சி அலுவலகத்தில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.







