உலகம் முழுவதும் நாளை கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படவிருக்கிறது. இந்த கொண்டாட்டத்திற்காக உலக நாடுகள் இந்த மாதம் தொடக்கம் முதலே தயாராக ஆரம்பித்து விட்டன. கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு சுகாதார நடவடிக்கைகளையும் முறையாக பின்பற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, தேவாலயங்களில் இன்று நள்ளிரவு முதல் சிறப்பு ஆராதனை நடைபெறவிருக்கிறது. தமிழகத்தில் உள்ள பிரபல தேவாலயங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலிக்கின்றன. தேவாலயங்களிலும், வீடுகளிலும் கிறிஸ்துமஸ் மரங்கள் வைக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்டுள்ளன. கொரோனா தொற்றை கருத்தில் கொண்டு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் சிறப்பு ஆராதனைகள் நடைபெறவிருக்கின்றன.

கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக விதவிதமான கேக்குகளும் தயாராகி வருகின்றன. கொரோனாவை குறிக்கும் வகையிலான கேக்குகளும் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளன. உலகம் முழுவதும் இனிப்பு விற்பனையும் களைகட்டியுள்ளது. குறிப்பாக அமெரிக்காவில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான ஏற்பாடுகள் கோலாகலமாக இருக்கிறது. வியட்நாமில் முகக்கவசம், கையுறைகளை பயன்படுத்தி கிறிஸ்துமஸ் மரங்கள் அலங்கரிக்கப்பட்டுள்ளன. அதேபோல் சாண்டா கிளாஸ் அனைவருக்கும் முகக்கவசம், சானிடைசர் வழங்குவதையும் நம்மால் பார்க்க முடிகிறது.

பண்டிகைக்காக அலங்கரிக்கப்பட்ட இடங்களில் குறைவான மக்கள் வந்து பார்வையிடவே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.







