ஆசிய சாம்பியன் ஹாக்கி அரையிறுதிக்கு தகுதி பெற்றதன் மூலம் தங்களின் முதல் இலக்கு நிறைவேறியுள்ளதாக மலேசிய பயிற்சியாளர் அருள் அந்தோணி தெரிவித்துள்ளார்.
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடரில் மலேசியா, ஜப்பான் அணிகளுக்கு இடையேயான போட்டியில் மலேசிய அணி சிறப்பாக விளையாடி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதன் மூலம் அந்த அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது. இந்நிலையில் மலேசிய ஹாக்கி அணியின் தலைமை பயிற்சியாளர் அருள் அந்தோணி செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறியதாவது :
இந்த வெற்றியை பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அரையிறுதிக்கு முன்னேற வேண்டும் என்ற முதல் இலக்கை எட்டியுள்ளோம். தென் கொரியா அணியுடனான போட்டிக்கு பிறகு, ஓய்வு நாளில் முழு உடல் தகுதி மற்றும் மன வலிமை பெற்று அரையிறுதிக்கு திட்டமிடுவோம். இந்திய அணிக்கு எதிரான அந்த தோல்வி மிகவும் அழுத்தத்தை கொடுத்தது. நான் வீரர்களிடம் அந்த போட்டி குறித்த நினைவுகளை மைதானத்திற்குள் எடுத்து செல்ல வேண்டாம் என்றும், தற்போதைய போட்டியில் மட்டுமே கவனம் செலுத்துமாறு கூறினேன்.
அதே போல வீரர்கள் சிறப்பாக விளையாடி வெற்றிக்கு வழிவகுத்தனர். அதிக கோல்கள் அடிக்க வேண்டும் என்பது எங்கள் நோக்கம் அல்ல, கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி அதனை கோலாக மாற்ற முயற்சிக்க வேண்டும் என கூறினேன். எங்கள் அணியில் உலகின் தலை சிறந்த கோல் கீப்பர் உள்ளார் என அருள் அந்தோணி தெரிவித்தார்.







