மத்திய தொலைத் தொடர்பு துறையின் அலைக்கற்றை ஏலத் திட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்தது.
இதன் மூலம் ஏலத்தில் வெற்றி பெறும் செல்போன் சேவை நிறுவனங்களுக்கு அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்படும். 700 , 800, 900, 1800, 2100, 2300 மற்றும் 2500 மெகா ஹெர்ட்ஸ் அலைவரிசை பேண்டில் ஸ்பெக்ட்ரம் ஏலம் இருக்கும் எனவும், இருபது ஆண்டு காலத்திற்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏலம் மூலம் ஸ்பெக்ட்ரம் பயன்படுத்துவதற்கான உரிமையை வென்று, தொலைத் தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்கள் தங்கள் நெட்வொர்க் திறனை அதிகரித்து கொள்ள முடியும். அதே நேரத்தில் புதிய நிறுவனங்கள் தங்கள் சேவைகளைத் தொடங்க முடியும். ஏலத்தில் போது ஏலதாரர்கள் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை ஏற்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஏலத்தில் வெற்றி பெற்றவர்கள் முழு ஏலத் தொகையையும் ஒரே நேரத்தில் செலுத்தலாம் அல்லது 700, 800, 900 மெகா ஹெர்ட்ஸ் அலைவரிசை ஸ்பெக்ட்ரத்திற்க்கு 25% அல்லது 1800, 2100 , 2300 2500 மெகா ஹெர்ட்ஸ் ஸ்பெக்ட்ரத்திற்க்கு 50% செலுத்தி, மீதத் தொகையை இரண்டு வருட கால அவகாசத்திற்குப் பிறகு செலுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.




