அரசு நீட் தேர்வு பயிற்சி மையங்களில் பயிற்சி பெற்ற 405 பேர் மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் தையல் தொழிலாளர் மகளிர் மேம்பாட்டு தொழிற்கூட்டுறவு சங்கத்தின் பேரவை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், நீட் தேர்வில் 510 மதிப்பெண்ணுக்கு கீழே பெற்ற யாருக்கும் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை என்றும், ஆனால் அரசு கொண்டு வந்த உள்ஒதுக்கீட்டின் மூலம் 147 மதிப்பெண் பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு கூட மருத்துவ படிப்பில் இடம் கிடைத்துள்ளது என்றார்.
மேலும் கோவையில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் சேர்ந்தால் ஆண்டிற்கு 7 லட்சம் ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும், ஆனால் 7.5% இடஒதுக்கீடு மூலம் அந்த கல்லூரியை தேர்வு செய்த மாணவர்களுக்கு அரசே கட்டணத்தை செலுத்துகிறது என தெரிவித்தார். தமிழகத்தில் நீட்தேர்வு இருக்கக் கூடாது என்பது தான் அரசின் கொள்கை என்றாலும், அரசு நீட் பயிற்சி மையங்களில் பயிற்சி பெற்ற 405 பேர் மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளதாக கூறினார்.







