இந்தியாவின் அண்டை நாடான இலங்கையைப் போலவே மற்றொரு அண்டை நாடான பாகிஸ்தானும் கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது. இந்த பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கான வாய்ப்பு எவ்வாறு உள்ளது என்பதை விவரிக்கிறது இந்த கட்டுரை.
அமெரிக்க டாலருக்கு நிகரான பாகிஸ்தான் நாணயத்தின் மதிப்பு முன் எப்போதும் இல்லாத வகையில் 200 ரூபாயை கடந்துள்ளது. பாகிஸ்தானின் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள இந்த சரிவு, அந்த நாட்டு மக்களையும் அரசையும் கடும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.
இம்ரான் கானுக்குப் பிறகு புதிதாக பதவிக்கு வந்துள்ள பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான அரசு, பொருளாதார சரிவின் வேகத்தை கட்டுப்படுத்த கடுமையாக போராடி வருகிறது.
அந்நிய செலாவணி கையிருப்பு மிகவும் குறைவாக இருப்பதுதான் அதன் முன் உள்ள மிகப் பெரிய சவால். தற்போது பாகிஸ்தானின் அந்நிய செலாவணி கையிருப்பு 10 பில்லியன் டாலர் மட்டுமே என்கின்றனர் அந்நாட்டின் பொருளாதார நிபுணர்கள்.
தொடர் இறக்குமதி காரணமாக இந்த கையிருப்பும் வேகமாக கரைந்து வருகிறது. இதை கட்டுப்படுத்தும் முதல் நடவடிக்கையாக, 38 பொருட்களின் இறக்குமதிக்கு கடந்த வியாழக்கிழமை பாகிஸ்தான் அரசு தடை விதித்தது.
இஸ்லாமாபாத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து இதனை தெரிவித்த அந்நாட்டின் தகவல் தொடர்புத் துறை அமைச்சர் மரியம் அவுரங்கசீப், மொபைல் போன்கள், ஆட்டோமொபைல்ஸ், வீட்டு உபயோகப் பொருட்கள், அழகுசாதன பொருட்கள், சாக்லெட், பாஸ்தா, ஐஸ் க்ரீம்ஸ், பதப்படுத்தப்பட்ட இறைச்சி, சிகரெட்ஸ் என 38 பொருட்களின் இறக்குமதிக்கு அரசு தடை விதித்துள்ளது என்றார். இந்த தடை மூலம் சுமார் 6 பில்லியன் டாலர் அந்நியச் செலாவணியை சேமிக்க முடியும் என்றும் அவர் கூறினார்.
நாடு பொருளாதார நெருக்கடியில் இருப்பதாக தெரிவித்த மரியம், நாட்டின் பொருளாதரம் மேம்பட தேவையான தியாகங்களை பாகிஸ்தானியர்கள் செய்ய வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.
பாகிஸ்தான் பொருளாதார நெருக்கடியை சந்திப்பதற்கு இம்ரான் கான் தலைமையிலான முந்தைய அரசே காரணம் என குற்றம் சாட்டிய மரியம், பெட்ரோலுக்கு அதிகப்படியாக மானியம் அளித்து நாட்டின் பொருளாதாரத்தில் விளையாடிவிட்டதாக விமர்சித்தார்.
நாட்டின் பொருளாதாரத்தை சீரமைக்க பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான அரசு இரவு பகலாக பாடுபட்டு வருவதாக செய்தியாளர்களிடம் கூறிய மரியம், அதன் ஒரு பகுதியாகவே 38 பொருட்களின் இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.
அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சியான பாகிஸ்தான் தெரீக் இ இன்சாப், கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அரசின் இந்த நடவடிக்கையால் இறக்குமதியில் ஈடுபட்டு வரும் வர்த்தகர்களும் சிறு வியாபாரிகளும் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்று அக்கட்சியைச் சேர்ந்த இளம் தலைவர் ஹம்மத் அசார் குற்றம் சாட்டியுள்ளார். அதோடு, இந்த தடையால் மிகச்சிறிய அளவிலேயே அந்நிய செலாவணியை சேமிக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் பொருளாதார நெருக்கடி காரணமாக உள்நாட்டுப் பொருட்களுக்கும் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு, அதன் காரணமாக அவற்றின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது.
தலைநகர் இஸ்லமாபாத்தில் ஒரு லிட்டர் பாலின் விலை 140 ரூபாய்க்கும், ஒரு கிலோ அரசி 167 ரூபாய்க்கும், ஒரு முட்டை 19 ரூபாய்க்கும், ஒரு கிலோ வாழைப்பம் 112 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
இதேபோல், போக்குவரத்துச் செலவு, மின்சார கட்டணம், பள்ளிக் கல்விக் கட்டணம், உடைகள், வீட்டு வாடகை என அனைத்தும் கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால், அந்நாட்டின் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
பாகிஸ்தானின் பொருளாதாரம் விரைவில் மேம்படும் என்றும், தற்போது ஏற்பட்டுள்ள சவாலை தனது அரசு திறம்பட எதிர்கொண்டு வருவதாகவும் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.
எனினும் அது அத்தனை எளிதல்ல என்கின்றனர் பாகிஸ்தானின் பொருளாதாரத்தை கூர்ந்து கவனித்து வரும் நிபுணர்கள்.
தற்போது, பாகிஸ்தானின் வெளிநாட்டுக் கடன் 130 பில்லியன் டாலர். வரும் ஜூன் மாதத்துக்குள் 2.5 பில்லியன் டாலரை திருப்பிச் செலுத்த வேண்டிய நிலையில் அந்நாடு உள்ளது. ஆனால் இதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு என கூறும் பொருளாதார நிபுணர்கள், இது பாகிஸ்தான் மீதான நம்பகத்தன்மையை கடுமையாக பாதிக்கும் என்கின்றனர்.
இலங்கையின் பொருளாதாரம் படுபாதாளத்தில் விழுந்துள்ள நிலையில், அதே திசையில் அதே வேகத்தில் பாகிஸ்தானும் சென்று கொண்டிருப்பதாகக் கூறும் பொருளாதார நிபுணர்கள், இதற்கு அந்த நாட்டின் ஆட்சியாளர்களும் ராணுவமுமே காரணம் என குற்றம் சாட்டுகின்றனர்.
கடும் சவால்களுக்கு மத்தியில், நாட்டின் பொருளாதாரத்தை பாகிஸ்தானின் புதிய அரசு சீர்படுத்துமா?
பொறுத்திருந்து பார்ப்போம்!









