கமல்ஹாசன் பயணதுக்காக ஹெலிகாப்டர் கொண்டு செல்லப்பட்டதால் சுற்றுலா செல்ல காத்திருந்த பயணிகள் அதிருப்தியடைந்தனர்.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே தனியார் (வைகை) பொறியியல் கல்லூரி மற்றும் பிளான்ட்டெக்ஸ் நிறுவனம் சார்பாக நபர் ஒன்றுக்கு 6,000 ரூபாய் வீதம் கட்டணம் வசூல் செய்து மதுரை அழகர் கோவில் யானை மலை உள்ளிட்ட இடங்களில் ஹெலிகாப்டரில் சுற்றி பார்க்கும் வசதியை கடந்த 24ஆம் தேதி தொடங்கியது. இந்நிலையில் ஹெலிகாப்டரில் பயணிக்க ஆன்லைன் மூலம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்திருந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் வைகை பொறியியல் கல்லூரியில் குவிந்திருந்தனர், நேற்று காலை 10 மணிவரை சுற்றுலாப் பயணிகள் ஹெலிகாப்படரில் பயணித்து வந்தனர்.
ஆனால் 11 மணி அளவில் திடீரென ஹெலிகாப்டர் அங்கிருந்து மாயமானது , இதனால் அங்கு முன்கூட்டியே பணம் கட்டி காத்திருந்த பயணிகள் ஹெலிகாப்டர் எங்கே என கேட்டு நிர்வாகத்தினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல்ஹாசனை ஏற்றிக்கொண்டு ஹெலிகாப்டர் திருச்சி சென்று விட்டதாக நிர்வாகத்தினர் தெரிவித்தனர். 3-ம் கட்ட தேர்தல் பிரசாரத்துக்காக நேற்று மதியம் சென்னையிலிருந்து கமல்ஹாசன் தனி விமானம் மூலம் திருச்சிக்கு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் திருச்சி விமான நிலையத்தில் ஓடுதள பாதையை பலப்படுத்தும் பணி நடந்து கொண்டிருப்பதால், அங்கு இறங்குவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து கமல்ஹாசன் சென்னையில் இருந்து தனி விமானத்தில் மதுரைக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருச்சிக்கு சென்றார்.
நிர்வாகத்தின் விளக்கத்தை கேட்டு ஆத்திரமடைந்த பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 3 மணிக்கு மேல்தான் ஹெலிகாப்டர் மீண்டும் திருச்சியில் இருந்து வரும் என அவர்கள் கூறிவிட்டதால் சிறு குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை நீண்ட நேரம் காத்திருந்தனர்.







