கர்நாடகாவில் 5 வயது சிறுமி ஒருவர் ஜிகா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என புனே ஆய்வுக்கூடம் தெரிவித்துள்ளது.
கடந்த 2019ம் ஆண்டு கொரோனா தொற்று பரவலால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். பின்னர் மத்திய அரசு எடுத்த பல்வேறு நடவடிக்கைகளின் மூலம் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டு தற்போது கொரோனா பரவல் விகிதம் வெகுவாக குறைந்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் கர்நாடகாவில் 5 வயது சிறுமி ஜிகா வைரசால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் கே.சுதாகர் கூறுகையில், கர்நாடக மாநிலத்தில் ஜிகா வைரஸ் பாதிப்பு இதுவே முதல் முறை. நிலைமையை அரசு தீவிரமாக கண்காணித்து வருகிறது. ஜிகா வைரஸ் பாதிப்பை எதிர்கொள்ள எங்கள் துறை தயார் நிலையில் உள்ளது என்றும் கூறினார்.
முன்னதாக புனேவில் உள்ள 67 வயது நபருக்கு கடந்த மாத இறுதியில் ஜிகா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர் நாசிக் பகுதியில் வசித்து வந்த நிலையில், நவம்பர் 6ம் தேதி புனே வந்திருந்த போது ஜிகா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் காய்ச்சல், இருமல், மூட்டு வலி, மயக்கம் உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதைகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் அவருக்கு ஜிகா வைரஸ் என உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் தீவிர சிகிச்சைக்கு பின் குணமடைந்தார்.
ஜிகா வைரஸ் கடந்த 2016ம் ஆண்டு பிரேசிலில் கண்டுபிடிக்கப்பட்டது. இதனை ஆய்வு செய்த மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் பொது சுகாதார நோய்களில் வீரியம் மிக்க வைரஸாக ஜிகா வைரஸ் கருதப்பட்டது. இது ஏடிஸ் கொசுவால் பரவுகிறது. இந்த நோயின் அறிகுறிகளாக லேசான காய்ச்சல், சொறி, வெண்படல அழற்சி, தரை மற்றும் மூட்டு வலி, உடல்நலக்குறைவு மற்றும் தலைவலி உள்ளிட்ட அறிகுறிகள் காணப்படும்.
முதன்முதலில் 1947ம் ஆண்டு உகாண்டாவில் ஜிகா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ஆப்பிரிக்காவின் தென்கிழக்கு ஆசியா மற்றம் பசிபிக் தீவுகளில் உள்ள பகுதிகளில் ஜிகா வைரஸ் தொற்று நோய் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.