சென்னை மின்சார ரயிலில் செல்போன் பறிக்க முயன்ற போது வெளியே தள்ளப்பட்டதில் காயமடைந்த இளம்பெண் சிகிக்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
கடந்த 2-ம் தேதி ப்ரீத்தி என்ற இளம்பெண் மின்சார ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார். இந்திரா நகர் ரயில் நிலையத்திற்கு ரயில் வந்த போது இளைஞர் ஒருவர் அவர் வைத்திருந்த செல்போனை பறிக்க முயன்றுள்ளார். அப்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த இளைஞர் ப்ரீத்தியை ரயிலில் இருந்து கீழே தள்ளியதாக கூறப்படுகிறது.
இதில் படுகாயம் அடைந்த அந்த இளம் பெண் சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று காலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுதொடர்பாக விசாரணை நடத்திய திருவான்மியூர் ரயில்வே போலீசார், பட்டினப்பாக்கத்தை சேர்ந்த விக்னேஷ்(27) அடையாறை சேர்ந்த மணிமாறன் ஆகிய இருவரை கைது செய்தனர்.அவர்கள் இருவர் மீதும் கொலை முயற்சி, வழிப்பறி ஆகிய இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் இளம்பெண் உயிரிழந்ததால் இந்திய தண்டனை சட்டம் பிரிவு 394 காயம் ஏற்படுத்தி வழிப்பறி செய்தல் என்ற பிரிவின் கீழ் கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது.






