ஏற்காட்டில் கனமழையால் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால், அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று இரவு பெய்த பலத்த மழையால் ஏற்காடு குப்பனூர் சாலையில் சுமார் ஐந்து கிலோமீட்டர் தொலைவிற்கு இரண்டு இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது.
குப்பனூர் பகுதிகளில் உள்ள விவசாய நிலங்கள் அனைத்தும் வெள்ளக்காடாக மாறியுள்ளது. இரு சக்கர வாகனம் கூட செல்ல முடியாத அளவிற்கு சேதாரம் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இந்நிலையில் அத்தியாவசிய பொருட்கள் கொண்டு வருவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இந்த சாலை பாதிப்பின் காரணமாக விலை ஏற்றம் ஏற்படுமோ என்ற அச்சம் பொதுமக்களிடையே எழுந்துள்ளது. தற்போது சீரமைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.







