குடியரசு தலைவர் தேர்தலில் தமக்கு வாக்களிப்பேன் என உறுதி அளித்த மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி அதன்படி நடந்துகொள்ளாததற்கான காரணம் புரியவில்லை என எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக களம் இறங்கிய யஷ்வந்த் சின்கா கூறியுள்ளார்.
கடந்த 18ந்தேதி நடைபெற்ற குடியரசு தலைவர் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக களம் இறங்கிய திரௌபதி முர்மு 64 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்று அமோக வெற்றி பெற்றார்.
இந்த தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக களம் இறங்கிய யஷ்வந்த் சின்கா, சுமார் 36 சதவீத வாக்குகளையே பெற்றார். இந்நிலையில் இந்த தோல்வி குறித்து கருத்து தெரிவித்துள்ள யஷ்வந்த் சின்கா, சிவசேனா கட்சியில் பிளவு ஏற்படாமல் இருந்திருந்தால், தமக்கு வாக்களிப்பதாக கூறிய கட்சிகள் அதன்படி வாக்களித்திருந்தால் தனக்கான வாக்கு சதவீதம் 45 சதவீதமாக உயர்ந்திருக்கும் என்றார்.
எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் தேர்வு குறித்து திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதலமைச்சருமான மம்தா பானர்ஜி கூட்டிய கூட்டத்தில், மதசார்பற்ற ஜனதா தள கட்சி சார்பில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவும், அவரது மகன் குமாரசாமியும் கலந்துகொண்டதாகக் யஷ்வந்த் சின்கா கூறினார். தமக்கு மதசார்பற்ற ஜனதா தள எம்.பி, எம்.எல்.ஏக்கள் வாக்களிப்பார்கள் என இருவரும் உறுதியளித்தாகவும் ஆனால் அவ்வாறு வாக்களித்தாது ஏன் என்று புரியவில்லை என்றும் யஷ்வந்த் சின்கா தெரிவித்தார்.
பாஜகவிலிருந்து விலகிய பின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்திருந்த யஷ்வந்த் சின்கா, அக்கட்சியின் தேசிய துணைத் தலைவராகவும் பதவி வகித்தார். இந்நிலையில் குடியரசு தலைவர் தேர்தலில் போட்டியிடுவதற்காக திரிணாமுல் காங்கிரசிலிருந்து அவர் விலகினார். குடியரசு தலைவர் தேர்தலில் தோல்வி அடைந்த பின்னர் மீண்டும் திரிணாமுல் காங்கிரசில் யஷ்வந்த் சின்கா இணைய உள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில் இந்த தகவலை மறுத்த யஷ்வந்த் சின்கா, இனி எந்த ஒரு கட்சியிலும் இணையப்போலதில்லை என திட்டவட்டமாகக் கூறினார். அரசியல் கட்சி எதிலும் இணையாமல் மககளுடன் தாம் இருப்பேன் என்றும் முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்கா கூறினார்.




