”மக்கள் சேவகராக இளையராஜா புதிய அவதாரம்”- அண்ணாமலை வாழ்த்து

நாளை மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்க உள்ள இளையராஜாவுக்கு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார். டெல்லியில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.  இந்திய திரையுலகின் இசை ஜாம்பவானாக 40 ஆண்டுகளுக்கும்…

நாளை மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்க உள்ள இளையராஜாவுக்கு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார். டெல்லியில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். 

இந்திய திரையுலகின் இசை ஜாம்பவானாக 40 ஆண்டுகளுக்கும் மேலாக வலம் வந்துகொண்டிருக்கும் இளையராஜா, முன்னாள் தடகள வீராங்கனை பி.டி.உஷா, பாகுபலி, ஆர்ஆர்ஆர் உள்ளிட்ட திரைப்படங்களுக்கு திரைக்கதை எழுதிய விஜயேந்திர பிரசாத், தர்மசாலா கோயிலின் நிர்வாகியும், சமூக சேவகருமான வீரேந்திர ஹெக்டே ஆகியோர் சமீபத்தில் மாநிலகளவை உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்.

நாடாளுமன்ற மழைக்காலக்  கூட்டத் தொடர் கடந்த திங்கட் கிழமை தொடங்கி புதிய எம்.பிக்கள் பதவியேற்ற நிலையில் இளையராஜா பதவியேற்கவில்லை. அமெரிக்காவில் நடைபெற்ற முக்கிய நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்கவிருந்ததால் அவரால் பதவியேற்க முடியாமல் இருந்தது. இந்நிலையில் அமெரிக்காவிலிருந்து திரும்பியுள்ள அவர் நாளை மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்க உள்ளார். இதற்காக அவர் இன்று டெல்லி சென்றார்.

இந்நிலையில் இளையராஜாவுக்கு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டிவிட்டரில் பதிவிட்டுள்ள அண்ணாமலை, எம்.பியாக பதவியேற்பதற்கு டெல்லி வந்துள்ள மேஸ்ட்ரோ இளையராஜாவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.  மக்கள் சேவகராக புதிய அவதாரம் எடுத்துள்ள இளையராஜா, இந்த பணியில் அனைத்து வெற்றிகளையும் பெற வாழ்த்துவதாகவும் அண்ணாமலை தனது டிவிட்டர் பதிவில் கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.