குடியரசு தின வாழ்த்துப் பதிவை நீக்கிய X – நடிகை ஸ்வரா பாஸ்கர் கண்டனம்!

நடிகை ஸ்வரா பாஸ்கர் தனது எக்ஸ் பக்கத்தில் குடியரசு தின வாழ்த்துகளை பகிர்ந்த நிலையில் அவரது பதிவினை X நிர்வாகம் நீக்கியுள்ளதாக தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இந்தியாவின் 76வது குடியரசு தினத்தை ஜனவரி 26 அன்று புது டெல்லி மற்றும் நாடு முழுவதும் பிரமாண்டமான கொண்டாடப்பட்டது.  இந்தியாவின் கலாச்சார பன்முகத்தன்மை, இராணுவ வலிமை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்தை ஆகியவற்றை வெளிப்படுத்தும் விதமாக குடியரசுதின விழாவில் பல அம்சங்கள் காட்சிப்படுத்தப்பட்டது. இந்த ஆண்டின் முக்கிய விருந்தினராக இந்தோனேஷிய அதிபர் பிரபுவோ சுபியாந்தோ கலந்து கொண்டார். இந்நிகழ்வில் இந்தியா – இந்தோனேஷியா இடையேயான கலாச்சார பரிமாற்றங்கள் தொடர்பான பல முக்கிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் தங்களது சமூக வலைதளங்களில் வாழ்த்துகளை பகிர்ந்தனர். இந்த நிலையில் பிரபல நடிகையும் சமூக ஆர்வலருமான ஸ்வரா பாஸ்கர் தனது எக்ஸ் பக்கத்தில் குடியரசு தின வாழ்த்துகளை பகிர்ந்தார். இதனைத் தொடர்ந்து அவரது எக்ஸ் பதிவினை எக்ஸ் நிர்வாகம் நீக்கிவிட்டதாகவும் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அவரது பதிவினை பலர் ரிப்போர்டிங் செய்ததின் அடிப்படையில் எக்ஸ் நிர்வாகம் அப்பதிவினை நீக்கியுள்ளது. மேலும் அவர் பயன்படுத்திய அவரது குழந்தையின் படத்தில் காப்பிரைட் மீறுதலுக்காக நீக்கியுள்ளதகாவும் தெரிவித்துள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள ஸ்வரா பாஸ்கர் எனது குழந்தையின் படத்தை பதிவிட்டது எப்படி காப்பிரைட் மீறல் ஆகும் என கேள்வி எழுப்பினார். மேலும்  எனது கருத்தை நீக்கியதன் மூலம் எனது பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம் ஆகியவை முடக்கப்பட்டுள்ளன. எனவே தயவுசெய்து உங்கள் விதிகளை மதிப்பாய்வு செய்து முடிவுகளை மாற்றுங்கள் என ஸ்வரா பாஸ்கர் குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.