உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி: ரபாடாவின் பந்தில் சரிந்த ஆஸி… 212 ரன்களுக்கு ஆல் அவுட்!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் 212 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது ஆஸ்திரேலியா.

ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இன்று தொடங்கியது. லண்டனின் லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் ஆஸ்திரேலியா பேட்டிங் செய்தது. ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக உஸ்மான் கவாஜா மற்றும் மார்னஸ் லபுஷேன் ஆகியோர் களம் இறங்கினர். 20 பந்துகளை எதிர்கொண்ட உஸ்மான் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். லபுஷேன் 56 பந்துகளில் 17 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

கேமரூன் கிரீன்4 ரன்னில் ஆட்டமிழக்க 46 ரன்களுக்கு ஆஸ்திரேலியா 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட டிராவிஸ் ஹெட் 11 ரன்கள் எடுத்து வெளியேறினார். 24 ஓவர்களில் ஆஸ்திரேலியா 67 ரன்களுக்கு 4 விக்கெட் இழந்திருந்தது.
இதன் பின்னர் இணைந்த ஸ்டீவ் ஸ்மித் மற்றும் வெப்ஸ்டர் இணை பொறுப்புடன் விளையாடி ரன்கள் சேர்த்தது. இருவரும் 5-ஆவது விக்கெட்டுக்கு 79 ரன்கள் சேர்த்தனர். அனுபவ வீரர் ஸ்மித் 66 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். வெப்ஸ்டர் 72 ரன்கள் குவித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
தொடர்ந்து அலெக்ஸ் கேரி 23 ரன்கள் எடுத்தார். 55 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலிய அணி 210 ரன்கள் சேர்த்தது. தொடர்ந்து 56.4 ஓவர்களுக்கு 212 ரன்களுக்கு ஆஸ்திரேலியா ஆல் அவுட் ஆனது. தென்னாப்பிரிக்க அணியில் ரபாடா அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளும், மார்கோ யான்சென் 3 விக்கெட்டுகளும் எடுத்து அசத்தினர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.