“இன்னும் அறிவியல்பூர்வமான, வலுவான ஆதாரங்கள் தேவை” – கீழடி விவகாரத்தில் கஜேந்திர சிங் ஷெகாவத் பதில்!

கீழடி விவகாரத்தில் மத்திய அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க தமிழ்நாடு அரசு தயங்குவது ஏன் என மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டின் கீழடி ஆய்வு முடிவுகளை மத்திய அரசு அங்கீகரிக்கவில்லை என்றும், போதிய ஆய்வு முடிவுகள் வந்தபோதும் அதனை மத்திய அரசு அங்கீகரிக்க மறுப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் ஷெகாவத், இன்னும் அதிகமான அறிவியல்பூர்வமான முடிவுகள் வந்த பிறகே அங்கீகாரம் வழங்க முடியும் எனத் தெரிவித்திருந்தார். அவரின் இந்த கருத்துக்கு தமிழ்நாடு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அமைச்சர் ஷெகாவத்,

“தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களே, நாங்கள் எந்த அறிக்கையையும் வெளியிட சிறிதும் தயங்கவில்லை. உண்மையில், இதுபோன்ற ஆராய்ச்சிகள், அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டால், நாங்களும் தங்களுடன் சேர்ந்து பெருமைகொள்வோம். ஆனால் இன்றைய அறிவியல் உலகின் ஏற்றுக்கொள்ளலுக்கு, எங்களுக்கு இன்னும் அறிவியல்பூர்வமான, வலுவான ஆதாரங்கள் தேவை.

அதனால்தான், அகழ்வாராய்ச்சி தரவுகளை அரசியலாக்க அவசரப்படுவதற்குப் பதிலாக, அறிவியல் பூர்வமான கூடுதல்தரவுகள் கிடைக்கும் அளவிற்கு ஆராய்ச்சியினை தொடர விரும்பும் மத்திய அரசிற்கு ஆதரவளிக்குமாறு, தமிழ்நாடு அரசிடம் நாங்கள் கேட்டுக் கொண்டோம்.

தமிழ்நாடு அரசு ஏன் ஒத்துழைக்கத் தயங்குகிறது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. தமிழ்நாடு பாரதத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகும் – பிரிவினை உணர்வுகள் மூலம் அல்லாமல், நேர்மையான அறிவின் மூலம் அதன் பாரம்பரியத்தை பெருமைப்படுத்த வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.