ரூ.300 கோடி செலவில் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் திருப்பணிகள் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொற்கரங்களால் விரைவில் தொடங்கி வைக்கப்படும் என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள தொன்மையான திருக் கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளுதல், குட முழுக்குகள் நடத்துதல், திருத்தேர் மற்றும் திருக்குளங்கள் புனரமைத்தல், பக்தர்களுக்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்ததுதல் என பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன்படி, இன்று (01.09.2022) தூத்துக்குடி மாவட்டம், தேரிக் குடியிருப்பு அருள்மிகு கற்குவேல் அய்யனார் திருக் கோயிலில் நடைபெற்ற திருக் குடமுழுக்குப் பெருவிழாவில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு கலந்து கொண்டார்கள்.
பின்னர் தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் அறங்காவலர் குழுத் தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் வாழ்த்துகளை தெரிவித்தார்.
பின்னர் அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம், தேரிக் குடியிருப்பு அருள்மிகு கற்குவேல் அய்யனார் திருக்கோயில் திருக்குடமுழுக்கு பெருவிழாவில் கலந்து கொண்டதில் மகிழ்ச்சி அடைகிறேன். திருக்கோயில் சுற்றுச்சுவர், திருமண மண்டபம், விருந்து மண்டபம் ஆகியவை அமைக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை பக்தர்கள் வைத்துள்ளார்கள்.
இக்கோரிக்கைகள் தமிழ்நாடு முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று நிறைவேற்றப்படும். இக்கோயிலுக்கு சுற்றுச்சுவர் கட்டும்போது மிகவும் உறுதித்தன்மையோடு கட்டப்படும். எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக பணிகளை முடித்து தருவோம்.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் அறங்காவலர் குழுத் தலைவராக இரா.அருள் முருகன் மற்றும் உறுப்பினர்களாக வி.செந்தில் முருகன், அனிதா குமரன், ந.ராமதாஸ், பா.கணேசன் ஆகிய ஐந்து பேர் பொறுப்பேற்று கொண்டனர்.
அறங்காவலர்கள் குழுத் தலைவர் தேர்வு செய்கின்ற பணி மிகுந்த மகிழ்ச்சியோடு நடந்தேறியிருக்கிறது. அனைவருக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் திருப்பணிகள் ரூ.300 கோடி செலவில் மேற்கொள்ளப்படும் என சட்டமன்றத்தில் அறிவித்திருந்தார்கள்.

அப்பணிகள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் பொற்கரங்களால் விரைவில் தொடங்கி வைக்கப்படும். இத்திருப்பணிகளை திருக்கோயில் அறங்காவலர் குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் ஒருங்கிணைந்து விரைந்து முடித்திட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
இத்திருப்பணிகளுக்கு திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினரும், மாண்புமிகு கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் அவர்களும், மாண்புமிகு சமூகநலத்துறை அமைச்சர் அவர்களும், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் அவர்களும், எல்லா விதமான உதவிகளையும் செய்வதற்கு தயாராக உள்ளனர்.

திருப்பணிகள் தொடங்கப்படும் நாளிலேயே முதலமைச்சர் எவ்வளவு காலத்திற்குள் பணிகள் நிறைவேற்றப்படும் என்று அறிவிப்பார்கள். அந்த கால அளவிற்குள் பணிகளை முடிப்பதற்கு இந்து சமய அறநிலையத்துறை அனைத்து முயற்சிகளை மேற்கொள்ளும்.
சொன்னதையும், சொல்லாததையும் செய்யும் அரசு இந்த அரசு என்பதை திருச்செந்தூர் திருக்கோயில் பணியில் நிரூபித்து காட்டுவோம். வெகு விரைவில் பக்தர்கள் தங்கும் விடுதிகளிலே உள்ள அறைகள் அனைத்தும் பயன்பாட்டிற்க்கு கொண்டு வரப்படும் என தெரிவித்தார் சேகர் பாபு.
இந்நிகழ்வின்போது இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் .இரா.கண்ணன் இ.ஆ.ப., மற்றும் இணை ஆணையர் திரு.எம்.அன்புமணி, இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.







