சென்னை சேலம் இடையேயான எட்டுவழிச்சாலை விவகாரத்தில் திமுகவின் நிலைப்பாடு குறித்து காய்கறி மார்க்கெட்டையே சோற்றில் மறைப்பதுபோல் பொய் சொல்வதாக அமைச்சர் எ.வ.வேலுவை பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார்.
கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏவும் பாஜக தேசிய மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா மறைக்கு பிறகான நான்கரை ஆண்டு காலம், தமிழகமே போராட்டக்களமாக இருந்ததாக தெரிவித்தார். இந்த கால கட்டத்தில் தமிழகத்தில் எதற்கெடுத்தாலும் போராட்டம் நடைபெற்றதாக வானதி சீனிவாசன் தமது அறிக்கையில் கூறியுள்ளார்.
இயற்கை எரிவாயு திட்டம், நியூட்ரினோ திட்டம், சென்னை- சேலம் எட்டுவழிச்சாலை திட்டம், எரிவாயு குழாய் பதிக்கும் திட்டம், என மத்திய, மாநில அரசுகள் அறிவிக்கும் எந்த வளர்ச்சித் திட்டமாக இருந்தாலும், அவற்றை எதிர்ப்பது, அவற்றுக்கு எதிராக பொய்ப் பிரச்சாரம் செய்வது போராளிகள் அவதாரம் எடுத்தவர்களின் நோக்கமாக இருத்ததாக கூறியுள்ள வானதி சீனிவாசன், இதன் மூலம் திமுக அரசியல் ஆதாயம் அடைந்ததாகக் குற்றம்சாட்டியுள்ளார்.
கடந்த அதிமுக ஆட்சிகாலத்தில் நடிகர்கள் கருத்துக் கந்தசாமிகளாக மாறி பேஸ்புக், டிவிட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் அரசுக்கு எதிராக கருத்துக்களை பதிவிட்டதாகவும் வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார்.
கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் எதற்கெடுத்தாலும் போராடிய திடீர் போராளிகள், கடந்த ஆண்டு மே மாதம் 7ந்தேதி திமுக ஆட்சிக்கு வந்ததும் காணாமல் போய்விட்டதாக குற்றம்சாட்டியுள்ளார். எதிர்க்கட்சியாக இருந்தபோது சென்னை- சேலம் இடையேயான எட்டுவழிச்சாலை திட்டத்தை எதிர்த்த திமுக தற்போது ஆளுங்கட்சியாக மாறியதும் அந்த திட்டத்தை நிறைவேற்ற முயல்வதாகவும் வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார். தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு ஒருபடி மேலே போய், ”சென்னை- சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்தை திமுக எதிர்க்கவில்லை, இந்த திட்டத்தால் பாதிக்கப்படும் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய இழப்பீடு கொடுக்க வேண்டும்தான் என்றுதான் சொன்னோம்” என முழு பூசணிக்காயை அல்ல ஒரு காய்கறி மார்க்கட்டையே சோற்றில் மறைக்க முயற்சி செய்துள்ளார் என்றும் தமது அறிக்கையில் பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார்.
திமுகவின் இரட்டை வேடம் தற்போது அம்பலமாகியுள்ளதாக கூறியுள்ள வானதி சீனிவாசன், கடந்த ஆட்சி காலத்தில் வளர்ச்சித் திட்டங்களுக்கு தடையாக இருந்ததற்காக பொதுமக்களிடம் திமுக மன்னிப்பு கோர வேண்டும் என்று தமது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.







