பெண்கள் சுயமரியாதையுடன் வாழவே மகளிர் உரிமைத்தொகை திட்டம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பெண்கள் சுயமரியாதையுடன் வாழ வேண்டும் என்பதற்காகவே மகளிர் உரிமை தொகை திட்டம் கொண்டுவரப்பட்டதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். குடும்பத்தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் கலைஞர் உரிமைத்தொகை திட்டம் செப்டம்பர் 15ம் தேதி முதல்…

பெண்கள் சுயமரியாதையுடன் வாழ வேண்டும் என்பதற்காகவே மகளிர் உரிமை தொகை திட்டம் கொண்டுவரப்பட்டதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

குடும்பத்தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் கலைஞர் உரிமைத்தொகை திட்டம் செப்டம்பர் 15ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டதை தொடர்ந்து, ரேஷன் கடை பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று, மகளிர் உரிமைத்தொகை திட்ட விண்ணப்பம் மற்றும் டோக்கன்களை விநியோகித்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்த திட்டத்துக்கான விண்ணப்பங்களைப் பதிவேற்றம் செய்ய தமிழ்நாடு முழுவதும் 36 ஆயிரம் இடங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன. இந்த முகாமை, தருமபுரி மாவட்டம் தொப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தொடர்ந்து, விண்ணப்பதாரர்களிடம் விவரங்களை முதலமைச்சர் கேட்டறிந்தார்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 1989ஆம் ஆண்டு தருமபுரியில் கருணாநிதி விதைத்த மகளிர் சுய உதவி குழு திட்டம் தற்போது 4 லட்சத்து 57 ஆயிரம் மகளிர் சுய உதவி குழுக்களாக உருவெடுத்துள்ளதாக கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர் தான் துணை முதலமைச்சராக, உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்த போது சுழல் நிதி, வங்கி கடன் வழங்கினோம். அரசு நிகழ்ச்சிகளில் பெரும்பாலும் அரசு திட்டங்களை துவங்கி வைக்கும் போது பயனாளிகள் சிலருக்கு மட்டுமே உதவிகள் வழங்படும். ஆனால் நான் எல்லோருக்கும் உதவிகளை வழங்கிவி்ட்டு செல்வேன்.

அப்படிபட்ட சிறப்பு வாய்ந்த திட்டத்திற்கு விதை போட்ட மண் இந்த தருமபுரி மண். தருமபுரியில் விதைத்தால் தமிழகம் முழுவதும் சென்று சேரும் என்பதால் தான் இந்த மகளிர் உரிமை தொகை திட்டம் இங்கே துவங்கி வைக்கப்பட்டிருப்பதாக பெருமிதம் தெரிவித்த முதலமைச்சர், நிதி நிலமை மோசமாக இருந்த நிலையில் கோட்டைக்குச்
சென்று முதலில் இட்ட கையெழுத்து மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து வசதி. அது இன்று சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதனால் ஏராளமான மகளிர் பயன்பெற்று வருகின்றனர்.

சத்துணவு திட்டத்தில் முட்டையுடன் சேர்ந்து சத்துணவை வழங்கியவர் கருணாநிதி. காலை சிற்றுண்டி உண்ணாமல் காலை நேரத்தில் பசியோடு வரும் குழநதைகளுக்கு முதலமைச்சரின் காலை உணவு திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த திட்டம் தற்போது அணைத்து அரசு பள்ளிகளிலும் விரிவுபடத்தப்பட உள்ளது . இதனால் 18 லட்சம் மாணாக்கர்கள் பயன்பெறுவார்கள்.

தேர்தல் நேரத்தில் கொடுக்கப்பட்ட வாக்குறுதி இப்பேது நிறைவேற்றபட்டிருக்கிறது. சிறு வியாபாரம், வணிகம் செய்து பிழைப்பு நடத்தும் பெண்கள், விழிம்பு நிலை பெண்கள் என யாருக்கெல்லாம் ஆயிரம் ரூபாய் தேவைப்படுமோ அவர்கள் அனைவருக்கும் நிச்சயம் வழங்கப்படும். செப்டம்பர் 15 ம் தேதி பெண்களின் கைகளுக்கு இந்த உரிமை தொகை வந்து சேரும்.

மகளிர் உரிமைத்தொகை திட்டம் குறித்து தவறான கருத்துகள் பரப்பப்படுவதாக குற்றம்சாட்டினார். பெண்கள் தன்னம்பிக்கையுடனும், சுயமரியாதையுடனும் வாழ வேண்டும் என்பதற்காகவே மகளிர் உரிமை தொகை திட்டம் கொண்டுவரப்பட்டதாக கூறிய அவர், மாதம் ஆயிரம் ரூபாய் என்பது உதவித்தொகை அல்ல உரிமைத் தொகை என குறிப்பிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்த திட்டத்திற்காக அடுத்தாண்டு 12 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்படும் எனவும் அறிவித்தார்.

  • பி. ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.