28.9 C
Chennai
September 27, 2023
முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம் செய்திகள்

மகளிர் இடஒதுக்கீடு மசோதா – கடந்து வந்த பாதை….

நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் மசோதா கடந்து வந்த பாதையை தற்போது பார்க்கலாம்….

பெண்களுக்கான அரசியல் இட ஒதுக்கீடு வரலாறு:

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

1931: இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போதே, பெண்களுக்கு இடஒதுக்கீடு குறித்த விவாதிக்கப்பட்டது. பேகம் ஷா நவாஸ் மற்றும் சரோஜினி நாயுடு போன்ற தலைவர்கள் ஆண்களுக்கு சமமாக பெண்களுக்கும் அரசியல் அந்தஸ்து வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.

1946: அரசியல் நிர்ணய சபையின் விவாதங்களிலும் மகளிர் இடஒதுக்கீடு விவகாரம் விவாதிக்கப்பட்டது. ஆனால், ஜனநாயகத்தில் அனைத்துக் குழுக்களுக்கும் தானாகவே பிரதிநிதித்துவம் கிடைக்கும் என்று கூறி நிராகரிக்கப்பட்டது.

1947: நாடு சுதந்திரம் அடைந்தவுடன் பெண்களின் உரிமைகள் மற்றும் சுதந்திரம் உறுதி செய்யப்படும் என்று ரேணுகா ரே தலைமையிலான பெண் உரிமை போராளிகள் நம்பிக்கை தெரிவித்தார். எனினும், அது நடக்கவில்லை.

1971: பெண்களின் நிலை குறித்து ஆராய குழு உருவாக்கப்பட்டது. நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்க குழுவில் உள்ள பலர் எதிர்த்தாலும், உள்ளாட்சி அமைப்புகளில் இடஒதுக்கீடு வழங்குவதை ஆதரித்தனர்.

1974: பெண்களின் நிலை குறித்த குழு பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க கல்வி மற்றும் சமூகநல அமைச்சகத்திடம் அறிக்கை சமர்ப்பித்தது. இந்த அறிக்கையில், பஞ்சாயத்து மற்றும் நகராட்சிகளில் பெண்களுக்கு இடஒதுக்கீடு செய்ய பரிந்துரைக்கப்பட்டது.

1988: பெண்களுக்கான தேசியக் கண்ணோட்டத் திட்டம் பஞ்சாயத்து மட்டத்திலிருந்து நாடாளுமன்றம் வரை பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்க பரிந்துரைத்தது. இது அனைத்து மாநிலங்களிலும் உள்ள பஞ்சாயத்து மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இடஒதுக்கீட்டை கட்டாயமாக்கும் 73வது மற்றும் 74வது அரசியலமைப்பு திருத்தங்களுக்கு அடித்தளம் அமைத்தது.

1993: 73 மற்றும் 74 வது அரசியலமைப்பு திருத்தங்களில், பஞ்சாயத்து மற்றும் நகராட்சி அமைப்புகளில் மூன்றில் ஒரு பங்கு இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டன. மகாராஷ்டிரா, ஆந்திரா, பீகார், சத்தீஸ்கர், ஜார்கண்ட், கேரளா உள்ளிட்ட பல மாநிலங்கள் உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50% இடஒதுக்கீட்டை அமல்படுத்தியுள்ளன.

செப்டம்பர் 12, 1996: எச்.டி.தேவே கவுடா தலைமையிலான அரசு 81வது அரசியலமைப்பு திருத்த மசோதாவாக பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தியது. ஆனால், தேவகவுடா அரசு கவிழ்ந்ததால் 1996-ம் ஆண்டு டிசம்பர் 9 ஆம் தேதி கீதா முகர்ஜி தலைமையிலான நாடாளுமன்றக் கூட்டுக் குழுவுக்கு இந்த மசோதா பரிந்துரைக்கப்பட்டது.

ஜூன் 26, 1998: தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு 12வது மக்களவையில் 84வது அரசியலமைப்பு திருத்தமாக மீண்டும் மகளிர் மசோதாவை அறிமுகப்படுத்தியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ஜேடி எம்பி ஒருவர் மசோதாவை கிழித்தார். வாஜ்பாய் அரசுக்கு பெரும்பான்மை இல்லாததால் ஆட்சி கலைந்தது – மசோதா மீண்டும் காலாவதியானது.

நவம்பர் 22, 1999: தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு மீண்டும் 13வது மக்களவையில் மசோதாவை அறிமுகப்படுத்தியது. ஆனால் இந்த விவகாரத்தில் ஒருமித்த கருத்தைப் பெறுவதற்கு அரசு மீண்டும் தவறியது.

தேசிய ஜனநாயக கூட்டணி அரசு 2002 மற்றும் 2003ல் இரண்டு முறை மக்களவையில் மசோதாவை கொண்டு வந்தது, ஆனால் காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகள் ஆதரவளிப்பதாக உறுதியளித்த பின்னரும் அதை நிறைவேற்ற முடியவில்லை.

மே 2004: ஆட்சிக்கு வந்த பிறகு, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் குறைந்தபட்ச செயல் திட்டத்தில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா இடம் பெற்றது.

மே 6, 2008: மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, மாநிலங்களவையில் மசோதாவை அறிமுகப்படுத்தியது. பின்னர் மே 9, 2008 அன்று, இந்த மசோதா சட்டம் மற்றும் நீதிக்கான நிலைக்குழுவுக்கு அனுப்பப்பட்டது.

டிசம்பர் 17, 2009: நிலைக்குழு தனது அறிக்கையை சமர்ப்பித்தது. சமாஜ்வாடி கட்சி, ஐக்கிய ஜனதாதளம் மற்றும் ராஷ்டீரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளின் எதிர்ப்புக்கு மத்தியில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

பிப்ரவரி 22, 2010: குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் தனது உரையில், மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவை விரைவில் நிறைவேற்ற அரசு உறுதிபூண்டுள்ளதாகத் அறிவித்தார்.

பிப்ரவரி 25, 2010: பெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

மார்ச் 8, 2010: மாநிலங்களவையில் மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது, ஆனால் அரசுக்கு ஆதரவை வாபஸ் பெறுவதாக சமாஜ்வாதி மற்றும் ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சிகள் மிரட்டல் விடுத்ததால் வாக்கெடுப்பு ஒத்திவைக்கப்பட்டது.

மார்ச் 9, 2010: மகளிர் இடஒதுக்கீடு மசோதா மாநிலங்களவையில் 186-க்கு 1 என்ற  வாக்குகள் என்ற பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது. ஆனால், அதை மக்களவையில் அறிமுகப்படுத்த முடியவில்லை.

2014 மற்றும் 2019: பாஜக தனது தேர்தல் அறிக்கையில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு வழங்குவதாக வாக்குறுதி அளித்தது.

மார்ச் 10, 2023: பாரத ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) தலைவர் கே.சந்திரசேகர ராவ்-ன் மகள் கவிதா, மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை விரைவில் நிறைவேற்றக் கோரி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார்.

செப்டம்பர் 18, 2023: நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் மசோதாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

செப்டம்பர் 19, 2023: நாடாளுமன்றத்தின் மக்களவையில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

Related posts

வருமான வரிக்கு வட்டி தள்ளுபடி கோரிய நடிகர் சூர்யாவின் மனு தள்ளுபடி

Halley Karthik

சிலிண்டர் விலை ரூ.269 உயர்வு

Janani

அசைவம் சாப்பிடும் ஆண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

EZHILARASAN D