விழுப்புரம் ஆட்சியர் அலுவலகம் முன்பு வீட்டிற்கு செல்ல மரங்களை அகற்றி வழி
ஏற்படுத்தி தரக் கோரி இரு பெண் பிள்ளைகளுடன் பெண் ஒருவர் மன்சோறு
சாப்பிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த நெடிமொழியனூரில் கணவனை இழந்து இரண்டு பெண் பிள்ளைகளுடன் வேண்டாமிர்தம் என்பவர் குடிசை வீட்டில் வசித்து வருகிறார். தனது வீட்டிற்குச் செல்லும் வழியில் வாய்கால் புறம்போக்கு இடத்தில் பல்வேறு மரங்கள் இருப்பதால் வீட்டிற்கு செல்ல முடியாத சூழல் ஏற்பட்டு
பாதிப்படைந்துள்ளதாக பல்வேறு முறை திண்டிவனம் வட்டாட்சியர் அலுவலகத்தில்
புகார் அளித்துள்ளார்.
அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் பசுமை வீடு திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கு போதிய வழி இல்லாததால் வீடு கட்ட முடியாமல் அவதியடைந்துள்ளதாக கூறி விழுப்புரம் ஆட்சியர் அலுவலக வாயில் முன்பு வேண்டாமிர்தம் தனது இரு பெண் பிள்ளைகளுடன் திடீரென மண் சோறு சாப்பிடும் போராட்டத்தில் ஈடுபட்டார். மேலும், இரு பெண் பிள்ளைகளை வைத்துக் கொண்டு விஷ பூச்சிகள் உள்ள இடத்தில் வழி இல்லாமல் நடந்து செல்வது உயிருக்கு ஆபத்தாக உள்ளதாக தெரிவித்தார்,
இதையடுத்து, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு இருந்த போலீஸார் அவர்களை மாவட்ட ஆட்சியரிடம் அழைத்துச் சென்று மனு அளிக்க வைத்தனர். இதனால், ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
-ம.பவித்ரா








