இன்னும் ஒரு வார காலத்திற்குள் கொரோனா இல்லாத தமிழ்நாடு என்கிற நிலை வரும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் 16-வது சட்டப்பேரவை கூட்டத்தொடரில், ஆளுநர் உரை மீதான விவாதத்தில் பேசிய அதிமுக எம்.எல்.ஏ. விஜயபாஸ்கர், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் சவாலானது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை என்றார்.
இந்த அரசு அதற்கான நடவடிக்கைகளை செய்யவில்லை என்று சொல்லவில்லை எனக் கூறிய விஜயபாஸ்கர், இன்னும் அதிகமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார். மேலும், மாவட்டம்தோறும் கொரோனாவுக்கு பிந்தைய சிகிச்சை மையத்தை அமைக்க வேண்டும் எனவும் விஜயபாஸ்கர் கேட்டுக்கொண்டார்.
இதற்கு பதிலளித்து பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், முதலமைச்சரின் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளால் தினசரி தொற்று எண்ணிக்கை 7 ஆயிரத்து 427 ஆக குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இன்னும் ஒருவார காலத்திற்குள் முற்றிலும் கொரோனா இல்லாத தமிழ்நாடு என்கிற நிலை வரும் எனவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதியளித்தார்.







