புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் குளிர்கால கூட்டத் தொடர்?

புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் எதிர்வரும் குளிர்கால கூட்டத் தொடரை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மத்திய பாஜக அரசின் சென்ட்ரல் விஸ்டா திட்டத்தின் ஒரு பகுதியாக புதிய நாடாளுமன்ற கட்டிடத்துக்கு பிரதமர் நரேந்திர…

புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் எதிர்வரும் குளிர்கால கூட்டத் தொடரை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

மத்திய பாஜக அரசின் சென்ட்ரல் விஸ்டா திட்டத்தின் ஒரு பகுதியாக புதிய நாடாளுமன்ற கட்டிடத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2020 டிசம்பரில் அடிக்கல் நாட்டினார். சுமார் 1200 கோடி ரூபாய் செலவில் கட்டப்படுவதாக கூறப்படும் புதிய நாடாளுமன்ற கட்டத்தின் 70 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளதாக சமீபத்தில் மக்களவையில் மத்திய அரசு அறிவித்தது. இந்த நாடாளுமன்ற கட்டடத்தின் தேசிய முக்கியத்துவம் கருதி அதன் பணிகளை முடிப்பதற்கான காலக்கெடு மேலும் நீட்டிக்கப்படாது எனவும் குறிப்பிட்ட காலத்திற்குள் பணிகள் முடிக்கப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்தது.

நாடாளுமன்ற கட்டடத்தின் உள் அலங்கார வேலைகள் மற்றும் தரைத்தளம் அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் அந்த பணிகளை விரைந்து முடித்து வரும் குளிர்கால கூட்டத் தொடரை புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் நடத்த மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்தியாவின் ஜனநாயக பாரம்பரிய சிறப்புகளையும் பெருமைகளையும் உலகிற்கு பறைசாற்றும் வகையில் பிரம்மாண்டமாக புதிய நாடாளுமன்றக் கட்டடம் அமைக்கப்பட்டுவரப்படுகிறது. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கென பிரம்மாண்ட ஹால், நூலகம், பல்வேறு கமிட்டிகளுக்கான அறைகள், உணவுக்கூடம் என பல்வேறு வசதிகள் புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் அமைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

 

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.