தவெக அரசின் வெற்றிப் பயணத் திட்டத்தால், ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஆட்டோ தொழிலாளர்களின் முக்கிய கோரிக்கையான, ஆட்டோ மீட்டர் கட்டணத்தை மாற்றி அமைப்பதில், தொடர்ந்து காலதாமதம் ஏற்பட்டு வருவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
தமிழ்நாடு ஆட்டோ ஓட்டுநர் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில், ஆட்டோ ஓட்டுநர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (15.10.2026) சென்னை, எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் விளையாட்டு மைதானம் அருகில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து, போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த 20-க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளை சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகத் தலைமை அலுவலகக் கூட்ட அரங்கிற்கு நேரில் அழைத்து, அவர்களின் கோரிக்கைகள் குறித்து விரிவான பேச்சுவார்த்தை நடத்தினார்.
இப்பேச்சுவார்த்தையின்போது, ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் மற்றும் நலன் சார்ந்த கோரிக்கைகள் குறித்து தொழிற்சங்கப் பிரதிநிதிகள் எடுத்துரைத்தனர். அவர்களின் கோரிக்கைகளைக் கனிவுடன் கேட்டறிந்த அமைச்சர், தொழிற்சங்கங்களின் கோரிக்கைகள் ஏற்கனவே அரசின் பரிசீலனையில் உள்ளதாகவும், அவற்றை தமிழ்நாடு முதலமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு சென்று, தொழிற்சங்கங்களின் நியாயமான கோரிக்கைகள் விரைந்து நிறைவேற்றப்படும் என உறுதியளித்தார்.
போக்குவரத்துத் துறை அமைச்சர் அளித்த உறுதிமொழியை ஏற்றுக்கொண்ட தொழிற்சங்கப் பிரதிநிதிகள், இன்று மேற்கொண்ட உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிடுவதாக அறிவித்தனர். மேலும், சில நாட்களுக்கு முன்பு சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் இப்ராஹிம், தனது இன்னுயிரை மாய்த்துக் கொண்ட சம்பவத்தை அறிந்து அமைச்சர் மிகுந்த மனவேதனை அடைந்ததாகவும், அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்ததோடு, அவரது மகனின் கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்டு பரிசீலிப்பதாகவும் தெரிவித்தார்.




