நல்ல கதை அமைந்தால் தோனி சினிமாவில் நடிக்கக் கூடும் என்று அவரது மனைவி சாக்ஷி தோனி தெரிவித்துள்ளார்.
‘தல’ தோனி மற்றும் அவரது மனைவி சாக்ஷி தோனி ஆகிய இருவரும் இணைந்து தொடங்கிய தோனி எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் முதல் திரைப்படம் ‘எல்.ஜி.எம்’ (லெட்ஸ் கெட் மேரீட்). அறிமுக இயக்குநர் ரமேஷ் தமிழ்மணி இயக்கத்தில் தயாராகும் இந்த திரைப்படத்தில் நடிகை நதியா, நடிகர் ஹரிஷ் கல்யாண், லவ் டுடே படத்தின் நாயகி இவானா, நகைச்சுவை நடிகர் யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.
விஸ்வஜித் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ரமேஷ் தமிழ்மணி இசையமைக்கிறார். சாக்ஷி சிங் தோனியின் கருத்தாக்கத்தை மையமாக கொண்டு, குடும்ப பொழுதுபோக்கு அம்சத்துடன் தயாராகிறது. இந்த படம் வரும் ஜூலை 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது.
சமீபத்தில் ‘எல்.ஜி.எம்’ படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டது. தொடர்ந்து படத்தில் இடம் பெற்றுள்ள ‘சலனா’ என்ற பாடலை வெளியிட்டது. இந்த பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதோடு, எதிர்பார்ப்பையும் அதிகரிக்க செய்துள்ளது. அண்மையில் இந்த படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் கலந்துகொள்வதற்காக தோனி மற்றும் அவரது மனைவி சென்னை வந்தார்.
எல்ஜிஎம் படத்தில் தல தோனி சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் தோனி ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார்கள். ஆனால் இதுகுறித்து படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடவில்லை.
இந்த நிலையில், படத்தின் பிரஸ் மீட் இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சாக்ஷி தோனி பங்கேற்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்தனர்.
அப்போது ‘தோனியை ஹீரோவாக வைத்து படம் பண்ணுவீங்களா?’ என்று செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, அது நேரம் வரும்போது அவர் முடிவு செய்வார். ஆனால் தோனியை வைத்து படம் பண்ணினால் நிச்சயம் அது ஒரு ஆக்சன் படமாக இருக்கும்.” என்றார் சாக்ஷி





