கட்டுரையாளர்: ஹேலி கார்த்திக்
உலகில் ஒவ்வொரு டென்னிஸ் வீரரின் பெருங்கனவு கிராண்ட் ஸ்லாம்தான். மொத்தம் நான்கு கிராண்ட் ஸ்லாம்கள் உள்ளன. ஆஸ்திரேலியா ஓபன், யுஎஸ் ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன் ஆகிய 4 கிராண்ட்ஸ்லாம்கள். இந்த போட்டிகள் அனைத்தும் கிராண்ட்ஸ்லாம் லிஸ்ட்டில் வந்தாலும், போட்டி களம் வெவ்வேறாக இருக்கும்.
ஆஸ்திரேலியா ஓபன் மற்றும் யுஎஸ் ஓபன் மட்டுமே ஹார்ட் கோர்ட்டில் நடைபெறும். அதாவது இவை மட்டுமே, சமதளப் பரப்பில் நீல நிற விரிப்பின் மேல் நடைபெறும். பிரெஞ்சு ஓபன் களிமண் ஆடுகளத்திலும், விம்பிள்டன் புல் தரை ஆடுகளத்திலும் நடைபெறும்.

ஒவ்வொரு வீரரும் இந்த மூன்று வித்தியாசமான ஆடுகளங்களில், ஏதேனும் ஒன்றிற்கு மட்டுமே பழக்கப்பட்டிருப்பார்கள். இதில் ஒட்டுமொத்தமாக 3 ஆடுகளத்திலும் விளையாடி வென்றவர்கள், காலண்டர் கிராண்ட் ஸ்லாமை வென்றவர்களாக கருதப்படுவார்கள்.

டென்னிஸ் வரலாற்றில் இதுவரை 5 பேர் மட்டுமே, காலண்டர் கிராண்ட்ஸ்லாமை வென்றுள்ளனர். அதில் 2 ஆண்களும், 3 வெண்களும் அடங்குவர்.

முதன் முறையாக 1938ல் டான் பட்ஜ் எனும் அமெரிக்க வீரர், தனது 23வது வயதில் காலண்டர் கிராண்ட்ஸ்லாம் வென்று சாதனை படைத்தார்.

அதனைத் தொடர்ந்து, 1953ல் அமெரிக்காவின் மவுரீன் கொன்னோலி எனும் வீராங்கனை, தனது 19வது வயதில் காலண்டர் கிராண்ட் ஸ்லாமை வென்று சாதனை படைத்தார்.

அந்தவகையில், காலண்டர் கிராண்ட் ஸ்லாமை வென்ற முதல் பெண் வீராங்கனையும் இவர்தான். இவரைத் தொடர்ந்து ராட் லாவர் எனும் ஆஸ்திரேலிய வீரர், தனது 24வது வயதில் காலண்டர் கிராண்ட் ஸ்லாம் வென்றார்.

இவருக்கு அடுத்து மார்கரெட் கோர்ட் மற்றும் ஸ்டெஃபி கிராஃப் ஆகிய இரு வீராங்கனைகள், 1970 மற்றும் 1988-களில் காலண்டர் கிராண்ட்ஸ்லாம்களை வென்றுள்ளனர்.

இவர்களில் ஆஸ்திரேலிய வீராங்கனை மார்கரெட் கோர்ட் எனும் 28 வயதிலும், ஜெர்மன் வீராங்கனை ஸ்டெஃபிகிராஃப் 19 வயதிலும் காலண்டர் கிராண்ட்ஸ்லாமை வென்றுள்ளனர்.

இந்த பட்டியலில் ராட் லாவர் 1962 மற்றும் 1969 என இருமுறை காலண்டர் கிராண்ட்ஸ்லாமை வென்றுள்ளார்.
செர்பியாவின் ஜோகோவிச் தற்போது மூன்று கிராண்ட்ஸ்லாம்களை வென்று, தற்போது நான்காவது கிராண்ட்ஸ்லாமில், அதாவது அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் விளையாடி வருகிறார்.

இதில் அவர் வென்றால், 33 ஆண்டுகளுக்கு பின்னர் காலண்டர் கிராண்ட்ஸ்லாமை வென்ற 6-வது டென்னிஸ் வீரர் மற்றும் 52 ஆண்டுகளுக்கு பின்னர் காலண்டர் கிராண்ட்ஸ்லாமை வென்ற 3வது ஆடவர் என்கிற சாதனைக்கு சொந்தக்காரராக ஜோகோவிச் பெயர் இடம்பெறும். எனவே, ஜோகோவிச் இந்த சாதனையை நிகழ்த்துவாரா என்கிற எதிர்பார்ப்பு, டென்னிஸ் ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.







