சிஎஸ்கேவில் ரெய்னாவை எடுக்காமல் போனது ஏன்?; காசி விஸ்வநாத் பதில்

நடப்பு ஆண்டிற்கான ஐபிஎல் ஏலத்தில் சிஎஸ்கேவில் ரெய்னாவை ஏலம் எடுக்காதது ஏன் என்பது குறித்து காசி விஸ்வநாத் பதிலளித்துள்ளார். நாடு முழுவதும் பல கோடி கிரிக்கெட் ரசிகர்களால் அதிகம் ஈர்க்கப்படும் போட்டி என்றால் அது…

நடப்பு ஆண்டிற்கான ஐபிஎல் ஏலத்தில் சிஎஸ்கேவில் ரெய்னாவை ஏலம் எடுக்காதது ஏன் என்பது குறித்து காசி விஸ்வநாத் பதிலளித்துள்ளார்.

நாடு முழுவதும் பல கோடி கிரிக்கெட் ரசிகர்களால் அதிகம் ஈர்க்கப்படும் போட்டி என்றால் அது ஐபிஎல் போட்டிகள்தான். ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் அணிகள் அனைத்தும் தங்களுக்கான வீரர்களை ஏலம் மூலம் தேர்ந்தெடுக்கின்றன. அப்படி நடப்பு ஆண்டிற்கான ஐபிஎல் ஏலம் கடந்த பிப். 12 மற்றும் 13 தேதிகளில் பெங்களூருவில் நடைபெற்றது.

இந்த ஏலத்தில் எந்த அணிக்கு யார் என்பது, பெரும் போட்டியாக அமைந்தது. ஒரு வீரரை யார் ஏலம் எடுக்கிறோம் என்பதற்கு நிலவிய போட்டியில் சில வீரர்கள் அதிகபட்ச விலைக்கெல்லாம் எடுக்கப்பட்டனர். ஆனால் இந்த ஏலத்தில் நடந்த திருப்பம் என்னவென்றால் மிஸ்டர் ஐபிஎல் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் ரெய்னாவை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை. இதனால் இவரது ரசிகர்கள் பெரும் ஏமாற்றமடைந்தனர்.

ஐபிஎல் போட்டிகளில் சிஎஸ்கே அணிக்கு பக்கபலமாகவும், சின்ன தல எனவும் அழைக்கப்படும் இவரை அணியில் எடுக்காததை கண்டு இணையத்தையே அதிரவிட்டனர் கிரிக்கெட் ரசிகர்கள். ஐபிஎல் வரலாற்றில் 4வது அதிக ரன்களை தன்பக்கம் வைத்துள்ளார் சுரேஸ் ரெய்னா. இவர் சென்னை அணிக்காக 205 போட்டிகளில் களமிறங்கி 4,687 ரன்களை எடுத்துள்ளார். மேலும் ஒட்டுமொத்த ஐபிஎல் விளையாட்டுகளில் 5,528 ரன்களை குவித்துள்ளார் இவர். ஐபிஎல் போட்டிகளில் சிஎஸ்கேவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியவர்தான் ரெய்னா.

இந்த நிலையில் யூடியூப் சேனல் ஒன்றின் நேர்காணலில் பேசிய அந்த அணியின் சிஇஓ காசி விஸ்வநாத், ரெய்னாவை அணியில் ஏன் எடுக்கவில்லை என்பது குறித்து பேசியுள்ளார். இது தொடர்பாக அவர் பேசியதாவது, “ஐபிஎல் தொடங்கியது முதலே ரைனாவின் பங்கு அளப்பறியது. இந்த ஏலத்தில் அவரை எடுக்காதது மிகவும் கடினமான ஒன்றாக அமைந்தது. ஆனால் வீரர்களின் ஃபார்மை பொறுத்தே அவர்களை அணியில் எடுக்கமுடியும். எது போன்ற வீரர்களை கொண்டு அணியை கட்டமைத்தால் அணி சரியாக இருக்கும் என்பதை நீங்கள் அனைவரும் புரிந்துகொள்ளவேண்டும். இது போன்ற காரணங்களால்தான் அவரை அணியில் எடுக்க முடியாமல் போனது” என்று பேசினார்.

ஐபிஎல் ரசிகர்களின் நாயகனான சுரேஸ் ரெய்னா சிஎஸ்கே அணியில் இடம்பெறாமல் போனது ரசிகர்களின் தீர்க்க முடியாத ஏமாற்றமாகவே இருக்கிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.