நீட் விவகாரத்தில் லட்சக்கணக்கான மாணவர்களின் குரலை மத்திய அரசு புறக்கணிப்பது ஏன்? -பிரியங்கா காந்தி கேள்வி!

நீட் விவகாரத்தில் லட்சக்கணக்கான மாணவர்களின் குரலை மத்திய அரசு புறக்கணிப்பது ஏன் என காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். மருத்துவப் படிப்புகளுக்கு ‘நீட்’ தேர்வு கட்டாயம் என ஒன்றிய அரசு…

நீட் விவகாரத்தில் லட்சக்கணக்கான மாணவர்களின் குரலை மத்திய அரசு புறக்கணிப்பது ஏன் என காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

மருத்துவப் படிப்புகளுக்கு ‘நீட்’ தேர்வு கட்டாயம் என ஒன்றிய அரசு அறிவித்தது முதல், கிராமப்புறங்களைச் சேர்ந்த ஏழை மாணவர்களின் மருத்துவப் படிப்புக் கனவுகள் தகர்ந்துபோய்த் வருகிறது.  மருத்துவம் படிக்க தகுதி இருந்தும், நீட் தேர்வால் தங்கள் கனவு நிறைவேறாமல் போனதால் கடந்த ஆண்டுகளில் ஏராளமான மாணவ, மாணவிகள் தற்கொலை செய்து கொண்டனர்.

தமிழ்நாட்டில் தொடங்கிய இந்த ‘நீட்’ எதிர்ப்பு போராட்டம் தற்போது பல்வேறு இடங்களில் எதிரொலித்து வருகிறது.  ‘நீட்’ தேர்வுக்காக பணம் படைத்தவர்கள் அதிகளவு பணம் கொடுத்து கோச்சிங் வகுப்பு சென்று படிக்கின்றனர்.  மேலும் பணத்தை கொடுத்தும், ‘நீட்’ தேர்வு வினாத்தாளை வெளியிட்டும் தொடர்ந்து முறைகேடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் இதனை ஒன்றிய அரசு கண்டுகொள்ளாமல் தேர்வை நடத்தி வருகிறது.

அண்மையில் நடைபெற்ற நீட் தேர்வில் கூட பீகார்,  ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்ட பெற்றோர்கள்,  மாணவர்கள், தேர்வு நடத்தும் அதிகாரிகள் என 30-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.  நாடு முழுவதும் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியானது.

இந்நிலையில்,  நீட் தேர்வு முடிவுகளில் முறைகேடு நடந்துள்ளதாக மாணவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். லட்சக்கணக்கான மாணவர்களின் குரலை அரசு புறக்கணிப்பது ஏன் என காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும்,  ஒரே பயிற்சி மையத்தை சேர்ந்த 6 மாணவர்கள் முழு மதிப்பெண்கள் பெற்று இருப்பது கடுமையான கேள்விகளை எழுப்பப்பட்டு வருவதுடன் பல்வேறு விதமான முறைகேடுகளும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது என பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

தேர்வு முடிவுகள் வெளியான பிறகு நாடு முழுவதும் ஏராளமான குழந்தைகள் தற்கொலை செய்து கொண்டதாக வெளிவரும் செய்திகள் வருத்தத்தையும் அதிர்ச்சியும் அளிக்கிறது எனவும் வேதனை தெரிவித்துள்ளார்.  நீட் தேர்வு முடிவுகள் குறித்து மாணவர்கள் எழுப்பும் கேள்விக்கு அரசு உரிய பதிலளிக்க வேண்டும் என்றும் பிரியங்கா காந்தி வலியுறுத்தியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.