நானும், ஓ.பி.எஸ்ஸும் ஒன்றாக சேர்ந்தால் அதிமுகவினருக்கு ஏன் கோவம் வருகிறது? என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கேள்வியெழுப்பியுள்ளார்.
சென்னை அடுத்த வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுக்குழு கூட்டம் அக்கட்சியின் துணைத் தலைவர் எஸ்.அன்பழகன் தலைமையில் இன்று நடைபெற்றது. அமமுக துணைத் தலைவர் அன்பழகன் தலைமையிலும் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் முன்னிலையிலும் நடைபெற்ற கூட்டத்தில் செயற்குழு பொதுக்குழு உறுப்பினர்கள் சுமார் 3 ஆயிரம் பேர் கலந்துகொண்டனர். பொதுக்குழுவில், பொதுச் செயலாளர், தலைவர், துணை தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் பட்டியல் அறிவிக்கப்பட்டது. அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளராக டிடிவி தினகரன் இன்று மீண்டும் பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவோடு ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட டிடிவி தினகரனுக்கு வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது. இதனை பெற்றுக்கொண்ட டிடிவி தினகரன் கட்சி நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்தார். தொடர்ந்து பல்வேறு தீர்மானங்கள் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டது. அதில், அமமுகவை தமிழக மக்களுக்கான இயக்கமாக நடத்தும் டிடிவிக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
இதேபோல் அம்மா மக்கள் முன்னேற்ற கழக தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்துவதற்கு இன்று பொதுக்குழுவில் ஒப்புதல் அளிக்கப்பட்டு, அமமுக தோற்றுவித்த பிறகு முதல் தலைவராக முன்னாள் எம்.பி. கோபால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை வானகரத்தில் நடைபெற்ற அமமுக பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் முதல் தலைவராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோபாலும், துணைத்தலைவர் அன்பழகனும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். புதியதாக தேர்வு செய்யப்பட்டவர்கள் இன்று முதல் 4 ஆண்டுகளுக்கு பதவியில் இருப்பார்கள்.
இந்த நிலையில், அமமுக பொதுக்குகழு கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் பொது செயலாளர் டிடிவி தினகரன் கூறியதாவது;
பொதுச் செயலாளராக தேர்வு செய்ததற்கு பொதுக் குழு உறுப்பினர்களுக்கு நன்றி.கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள கோபாலை , மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா தான் என்னிடம் அறிமுகப்படுத்தி வைத்தார். பதவி இருந்தாலும் இல்லாவிட்டாலும் இயக்கத்துக்காக செயல்பட்டவர். கோபால் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த போது எடப்பாடி பழனிசாமியுடன் நட்பாக பழகியவர். அப்படி இருந்தும் அவர் எடப்பாடி பழனிசாமி பக்கம் செல்லவில்லை. அவரை போலவே அவரது மகன் சோளிங்கர் பார்த்திபனும் என்னுடன் உள்ளார். அவர் தந்தை சொல்லை பின்பற்றக்கூடியவர்.
நான் கூட கேட்டேன் என்னால் பலன் அடைந்தவர்களே எனக்கு எதிராக சென்று விட்டார்கள். நீங்கள் என்னுடன் இருக்கிறீர்களே என கேட்டுள்ளேன். இன்று நான் பொதுச் செயலாளராக தேர்வான சான்றிதழையே பார்த்திபன் தான் எனக்கு வழங்கியுள்ளார். அமமுக ஆறு ஆண்டுகளை கடந்து விட்டது. கட்சி இல்லாமலே சுயேட்சையாக ஆர்.கே.நகரில் வெற்றி பெற்றேன். சட்டமன்ற தேர்தலானாலும் நாடாளுமன்ற தேர்தலானாலும் தனித்து நிற்கக்கூடிய தைரியம் நமக்கு உள்ளது. அதனால் தான் தேர்தல் பின்னடைவுகள் நம்மை பாதிக்கவில்லை. கிளை இல்லாத ஊரே இல்லை என்ற நிலையை எட்டியுள்ளோம். நமக்கு மக்களிடம் நல்ல பெயர் உள்ளது. பண பலம் தான் இல்லை. ஒருநாள் நிச்சயம் மக்கள் நம்மை ஆட்சிக்கு கொண்டு வருவார்கள்.
நம்முடைய பொதுக்குழு உறுப்பினர்களுக்கு பணம் கொடுக்கவில்லை. மதிய உணவு மட்டுமே கொடுத்துள்ளோம். ஆனால் பொதுக்குழு உறுபினர்களை தக்கவைக்க எடப்பாடி பழனிசாமி என்னென செய்தார் என்பது தெரியும். கடந்த ஆண்டு இதே இடத்தில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் ஓ.பி.எஸ், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியனுக்கு என்ன நடந்தது என எல்லோருக்கும் தெரியும். கோடநாடு கொலை கொள்ளை வழக்கை விரைந்து விசாரிக்க ஓ.பி.எஸ் அணியுடன் இணைந்து போராட்டம் நடத்தியுள்ளோம்.
நாம் அனைவரும் ஒன்றிணைந்தால் தான் தீய சக்தியான் திமுக வை வீழ்த்த முடியும். திமுகவை எதிர்க்க அம்மாவின் தொண்டரோடு இணைய தயார் என சொன்னேன். தேர்தலில் கூட போட்டியிடமாட்டேன் என சொன்னேன். ஏதோ நான் கூட்டணிக்காக காத்திருப்பதை போல எண்ணினார்கள். ஆனால் இன்றைய நிலைமை என்ன?. முன்னாள் அமைச்சர்கள் அனைவரும் அவர்கள் மீதுள்ள வழக்குகளுக்காக அச்சத்தில் உள்ளார்கள்.
திமுகவுடன் பேரம் பேசி வருகிறார்கள். எடப்பாடிக்கு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணமில்லை. எப்படியாவது தமிழ்நாட்டில் ஓ.பி.எஸ் மற்றும் டிடிவியை ஒழித்துவிட வேண்டும் என்பது தான் நோக்கம். இதை கண்டு எல்லாம் நான் அச்சப்படப்போவதில்லை.
2026 ல் நாம் தான் ஆட்சி அமைப்போம். கடந்த தேர்தலில் எடப்பாடி தொகுதியில் பா.ம.க தயவில்லாமல் ஜெயிக்க முடியாது என உணர்ந்து வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுத்து கூட்டணியில் சேர்த்துக்கொண்டார். நாங்கள் தைரியமாக தனித்து போட்டியிட்டோம். கூட்டணி அமைத்து போட்டியிட்டு வட தமிழ்நாட்டில் எத்தனை தொகுதியில் அதிமுக வெற்றி பெற்றது?. பா.ம.க இல்லாவிட்டால் வெற்றி பெற்றிருக்க முடியாது. கோடநாடு விவகாரத்தில் ஆர்பாட்டம் நடத்திய போது எந்த இடத்திலும் எடப்பாடி பெயரை சொல்லவில்லை. ஆனால் அதிமுகவினர் ஏன் கோபப்பட்டார்கள். நானும், ஓ.பி.எஸ்ஸும் ஒன்றாக சேர்ந்தால் அதிமுகவினருக்கு ஏன் கோவம் வருகிறது?. எங்களை தான் வேண்டாம் என ஒதுக்கிவிட்டீர்களே.. பிறகு ஏன் கோவம்?. உங்களை வீழ்த்தாமல் ஓயப்போவதில்லை. அதிமுகவினர் பணம் கொடுத்து தேர்தலில் வெற்றி பெற்று வருகிறார்கள்.
எத்தனை நாள் கொடுக்க முடியும் என பார்க்கலாம். பணம் இருந்தும் ஈரோடு கிழக்கு தொகுதியில் வெற்றி பெறவில்லை. 70 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்கள். இது தான் தலைமைக்கு அழகா. 2006 ல் திமுக ஆட்சி அமைத்தாலும் மைனாரிட்டி ஆட்சி தான் அமைக்க முடிந்தது. அது தான் ஜெயலலிதாவின் தலைமை. எடப்பாடி பழனிசாமியிடம் அடைக்கலம் ஆவேன் என எதிர்பார்த்தால் அது ஒரு போதும் நடக்காது. எடப்பாடி பழனிசாமியின் துரோகத்தை டிடிவி ஒரு போதும் மன்னிக்க மாட்டான். துரோகத்தை தோலுரிக்காமல் விடமாட்டேன். வரும் காலத்தில் அரசியல் அரங்கில் எடப்பாடி பழனிசாமி மற்றும் சிலரை வீழ்த்தாமல் ஓயமாட்டேன். இவ்வாறு டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
- பி.ஜேம்ஸ் லிசா








