கூட்டணியை இறுதி செய்வதற்காக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழ்நாடு வந்த நிலையில், அதனை புரிந்து கொண்டு எடப்பாடி பழனிசாமி அவரை சந்திக்க செல்லவில்லை என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.
சிதம்பரத்தில் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: “உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வந்துள்ளார். வழக்கம்போல்
தனது பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளார். ஊழல் நிறைந்த அரசாங்கம் என்று
முந்தைய காங்கிரஸ் அரசை குறை கூறியுள்ளார். இது அப்பட்டமான பொய்.
மன்மோகன்சிங் போன்ற நேர்மையான, நியாயமான பிரதமராக மோடியால் ஒரு காலமும் இருக்க முடியாது. மன்மோகன்சிங் மீது எந்த குற்றச்சாட்டும் கிடையாது. எந்த
நீதிமன்றத்திலும் அவர் மீது விசாரணை நடைபெறவில்லை.
2ஜி அலைக்கற்றை குற்றச்சாட்டை இவர்கள் ஆரம்பித்தார்கள். ராஜா மீதும் கனிமொழி மீதும் அவர்கள் அந்த குற்றத்தை சுமத்தினார்கள். அதிகாரி வினோத்ராய் தவறான புள்ளி விவரங்களை எடுத்து சொன்னார். ஆனால் அப்பொதைய ஒன்றிய அரசு ஜீரோ லாஸ் என்று தெரிவித்தது. ஆனாலும் அந்த குற்றச்சாட்டு புயல் வேகத்தில் பரவியது. அதனுடைய பாதிப்பால் நாங்கள் அரசாங்கத்தை இழந்தோம்.
தமிழ்நாட்டிற்காக துரும்பை கூட செய்யாமல் உண்மைக்கு புறம்பான தகவல்களை உள்துறை அமைச்சர் பேசி வருகிறார். மதச்சார்பற்ற அணியின் முன்னணி தலைவராக ஸ்டாலின் இருப்பதால் அவர் குறிவைக்கப்படுகிறார். இந்தியாவில் தமிழர் ஒருவர் பிரதமராக வருவார் என அமித்ஷா கூறியுள்ளார்.
அது அண்ணாமலையாக இருந்தால் வரவேற்கிறேன்,ஏனென்றால் அண்ணாமலை தமிழர் என்று நினைக்கிறேன்.கூட்டணியை இறுதி செய்வதற்காக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழ்நாடு வந்துள்ளார். அதனை புரிந்து கொண்ட எடப்பாடி பழனிசாமி அவரை சந்திக்க செல்லவில்லை ” என கே.எஸ். அழகிரி தெரிவித்தார்







