முடிந்தது கோடை விடுமுறை: 6 -12 ஆம் வகுப்புகளுக்கு இன்று பள்ளிகள் தொடக்கம்…

கோடை விடுமுறை முடிந்து இன்று 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு பள்ளிகள் தொடங்கப்படுகிறது.  2022 – 2023 கல்வி ஆண்டில் பள்ளி மாணவர்களுக்கான ஆண்டு இறுதி தேர்வுகள்…

கோடை விடுமுறை முடிந்து இன்று 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு பள்ளிகள் தொடங்கப்படுகிறது. 

2022 – 2023 கல்வி ஆண்டில் பள்ளி மாணவர்களுக்கான ஆண்டு இறுதி தேர்வுகள் கடந்த ஏப்ரல் 29 ஆம் தேதியுடன் நிறைவடைந்து கோடை விடுமுறையானது மே மாதம் முழுவதும் விடப்பட்டது.

அதன் பின்னர் ஜூன் 1 ஆம் தேதி 6 முதல் 12 ஆம் வகுப்புகும் ஜூன் 5 ஆம் தேதி 1 முதல் 5 ஆம் வகுப்புக்கும் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நிலவிய கடுமையான வெப்பம் காரணமாக அனைத்து மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கும் தேதி ஜூன் 7 ஆம் தேதியாக மாற்றப்படுவதாக பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்தார்.

அதன் பின்னரும் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் 100 டிகிரி செல்சியஸ்க்கு மேல் வெப்பநிலை தொடர்ந்து பதிவாகி வந்ததன் காரணமாகவும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் தரப்பிலும் சமூக வலைதளங்களிலும் பள்ளி திறப்பு தேதியை தள்ளி வைக்க கோரிக்கை எழுந்ததது. அதனைத் தொடர்ந்து, மாணவர்களின் நலன் கருதி மீண்டும் பள்ளிக்கல்வித்துறை கோடை விடுமுறையை நீட்டித்து பள்ளிகள் திறக்கும் தேதியை ஒன்று முதல் ஐந்தாம் வகுப்புகளுக்கு ஜூன் 14ஆம் தேதியும் 6 முதல் 12 ஆம் வகுப்பிற்கு ஜூன் 12ஆம் தேதியும் திறக்கப்படும் என அறிவித்தது.

அதன்படி கோடை விடுமுறை முடிந்து 6 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கு இன்று பள்ளிகள் செயல்பட தொடங்குகிறது. அதற்காக தமிழகம் முழுவதும் உள்ள மாணவர்கள் வருகையை ஒட்டி சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்றன.

கோடை விடுமுறை முடிந்து அனைத்து வகை நடுநிலை,உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஜூன் 12 திங்கள் கிழமையான இன்று பள்ளி திறக்கப்பட்டு உள்ளது.

பள்ளி திறந்த முதல் நாள் அன்றே அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 12 வரை பயிலும் மாணவர்களுக்கு பாட புத்தகங்கள் மற்றும் கற்றல் உபகரணங்கள் வழங்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது . அதன் ஒரு பகுதியாக சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள ஜெயகோபால் கரோடியா அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பாடப்புத்தகங்கள் மற்றும் கற்றல் உபகரணங்களை வழங்க உள்ளார்.

பள்ளிகள் திறப்பு திட்டமிட்டதை விட தாமதாக இருப்பதால் அதனை ஈடு செய்ய சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும் என்று ஏற்கனவே பள்ளிக்கல்வித் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.