சமீபத்தில் உத்தரகாண்ட் மாநிலத்தில் பள்ளி ஒன்றில் பட்டியலினத்தை சேர்ந்த ஊழியர் சமைத்து கொடுத்த உணவை மாணவர்கள் புறக்கணித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மாணவர்களின் இந்த பிரச்னைக்கு அம்மாநில அரசாங்கம் அறிய வகையில் தீர்வை கண்டது. அதன்படி சம்பந்தப்பட்ட ஊழியரை பணி நீக்கம் செய்துவிட்டு, உயர்சமூகத்தைச் சேர்ந்த மற்றொரு பெண் ஊழியரை பணியமர்த்தி பிரச்னையை முடித்து வைத்துள்ளது.
21ம் நூற்றாண்டிலேயே தீண்டாமை கொடுமை இவ்வளவு வெளிப்படையாக பின்பற்றக்கூடிய நிலையில், 19ம் நூற்றாண்டில் இந்த கொடுமை எப்படி இருந்திருக்கும்?
இக்காலக்கட்டத்தில்தான் இந்திய கல்வியிலின் தாய் என்று அழைக்கப்படும் சாவித்திரி பாய் பிறந்தார்.
1608ம் ஆண்டு குஜராத்தின் சூரத்தில் வந்திறங்கிய ஆங்கிலேயர்கள் வணிகத்தின் மூலம் மெள்ள தங்கள் ஆக்கிரமிப்பினை அதிகரிக்கத் தொடங்கிய காலம் அது. 1757ல் இந்தியா முழுமையாக அவர்களின் ஆளுகைக்கு கீழ் சென்றது. இந்தியாவின் வட மாநிலங்கள் பெரும்பாலும் நால் வர்ணங்களின் அடிப்படையிலேயே இயங்கி வந்த சூழலில் ஆங்கிலேயர்கள் இதை கண்டும் காணாமல் தங்கள் பணியை தொடர்ந்து வந்தனர்.
இதனையடுத்து ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி ஆப்கானுடன் போரில் ஈடுபட்டது. இப்போர் 1839 முதல் 1842 வரை தொடர்ந்தது. இதில் சுமார் 12,000 பேர் கொல்லப்பட்டனர். இக்காலத்தில் இந்தியாவில் ஒரு முக்கிய மாற்றம் மெள்ள அரும்பியது. ஒன்பது வயதில் ஜோதிராவ் புலேவை மணந்த சாவித்திரி தனது 13வது வயதில் அதாவது 1840ல் ஒரு பிராமண விதவையின் குழந்தையை தத்தெடுத்து வளர்த்தார்.
அக்காலத்தில் இது அவ்வளவு சுலபமில்லை. அப்போதிருந்த கலாச்சாரத்தின்படி கணவனை இழந்த பெண்கள் உயர் சமூகம் என்றழைத்துகொள்ளும் நபர்களால் பாலியல் சுரண்டல்களுக்கு உள்ளாக்கப்படுவது அனுமதிக்கப்பட்ட ஓர் அநீதியாக இருந்தது. இதனால் கர்ப்பமடையும் பெண்கள் மனமுடைந்து உயிரிழப்பு கொள்வார்கள். அப்படியான ஒரு பெண்னை காப்பாற்றி அவரின் குழந்தையைத்தான் சாவித்திரிபாய் தத்தெடுத்து வளர்த்தார்.
இதனைத் தொடர்ந்து ஜோதிராவ் தனது மனைவிக்கு கல்வியை கற்றுக்கொடுக்கிறார். இது அவர்களது வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்கிறது. சாவித்திரி பாய்க்கு நான்கு ஆண்டுகள் கல்வி கற்றுக்கொடுத்த ஜோதிராவ் புலே, கல்வி மறுக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் விதவை பெண்களுக்கும் கல்வியைக் கொடுக்க தனது மனைவி சாவித்திரியுடன் சேர்ந்து சபதமேற்கிறார்.
இதை செயல்படுத்திட ஜோதிராவ் புலே 1846ஆம் ஆண்டில் ஒரு பள்ளியை தொடங்கி சாவித்திரிபாயுடன் பாத்திமா ஷேக் என்ற பெண்ணையும் சேர்த்து ஒடுக்கப்பட்ட பெண்களுக்குக் கல்வி கற்பிக்கும் பணியை தொடக்கி வைக்கிறார்.
கல்வி கற்பிக்க அதிக அளவில் எதிர்ப்பு மேலெழுந்த நிலையில், ஆசியர்கள் யாரும் இப்பணியை மேற்கொள்ள முன்வரவில்லை. எனவே இதற்கு தன்னை தானே தயார்ப்படுத்தினார் சாவித்திரி. இதற்காக 1848ஆம் ஆண்டு ஆசிரியர் பயிற்சி பெற்றார்.
வரலாற்றிலேயே முதன் முறையாக இந்தியாவில் பெண் குழந்தைகளுக்கான பள்ளியை புனேவில் 1848ஆம் ஆண்டு புலே தம்பதிகள் தொடங்கினார்கள். ஒன்பது மாணவிகளுடன் தொடங்கப்பட்ட அப்பள்ளியின் தலைமை ஆசிரியராக பணியாற்றினார் சாவித்திரிபாய் புலே.
இக்காலகட்டம் உலக அளவில் மிக முக்கியமான காலகட்டமாகும். பல்வேறு புதிய கண்டுபிடிப்புகள் தோன்றத் தொடங்கின. அறிவியல் கண்டுபிடிப்புகளின் பொற்காலம் என்றும் கூட இதனை அழைக்கலாம். இந்நிலையில் ஆங்கிலேயர்கள் இந்தியாவில் தங்கள் வணிகத்தை நவீனப்படுத்த இக்கண்டுபிடிப்புகளை பயன்படுத்திக்கொள்ள நினைத்தனர். பிரிட்டன் நாடாளுமன்றத்தில் இந்தியாவில் ரயில் சேவையைத் தொடங்க வேண்டும் என்று தீர்மானத்தை முன்மொழிந்து அதற்கான அனுமதியையும் பெற்று பணியையும் தொடங்கினர். ஆனால் இந்திய சமூகத்தில் இந்த மாற்றங்கள் எல்லாம் எந்த தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. மக்களின் நிலை அதேபோலத்தான் இருந்தது. சாதியும் மதமும் பெண்களின் வாழ்க்கையை அதே நிலையில் நிலைத்து வைத்திருந்தது.
இதனை களைந்தெறிய புலே தம்பதிகள் மேற்கொண்ட முயற்சியை பழமைவாதிகளும், உயர்சாதியினரும் கடுமையாக எதிர்த்தனர். சாவித்திரி மீது இவர்கள் சேற்றினையும், சாணத்தையும், மலத்தினையும் வீசி அவமானப்படுத்தினர். இதை அத்தனையும் பொறுத்துக்கொண்ட சாவித்திரி ஜோதிராவிடம் ஆலோசித்தார். இதற்கு அடுத்த நாளிலிருந்து சாவித்திரி இரண்டு புடவைகளை பள்ளிக்கு கொண்டு சென்றார். தன்மீது எறியப்படும் கழிவுகளை பள்ளிக்கு சென்று சுத்தம் செய்துவிட்டு மாற்று புடவையை அணிந்துகொண்டு பாடம் சொல்லிக்கொடுப்பார்.
இந்தியாவில் ஏற்பட்ட 24 பெரும் பஞ்சங்களில் 18-19ம் நூற்றாண்டில் ஏற்பட்ட பஞ்சம் மிக முக்கியமானது. இதன் காரணமாக 1850 முதல் 1899 வரை மில்லியன் கணக்கானவர்கள் உயிரிழந்தனர். பிரித்தானிய இந்தியாவில் அந்த பஞ்சங்கள் நாட்டின் நீண்டகால மக்கள்தொகை வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் அளவுக்கு மோசமாக இருந்ததாக பல வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். அந்த இக்கட்டான சூழலில்தான் 1852ல் சாவித்திரிபாய் தொடங்கி வைத்த “மஹிளா சேவா மண்டல்” (பெண்கள் சேவை மையம்) மனித உரிமைகள், சமூக அங்கீகாரம் போன்ற சமூக விஷயங்கள் குறித்துப் பெண்களிடையே விழிப்புணர்வை வளர்ப்பதில் முக்கிய பங்காற்றியது. இதனையடுத்து 52 ஆதரவற்ற குழந்தைகளுடன் உறைவிடப் பள்ளியையும் தொடங்கினார் சாவித்திரிபாய்.
இதனைத் தொடர்ந்து 1897இல் மகாராஷ்டிரா மாநிலத்தில் பிளேக் நோய் தாக்கியதில் பல மக்கள் நோயுற்றனர். ஆங்கிலேய அரசு சிறப்புச் சட்டம் போட்டு நோயுற்ற மக்களை ஒதுக்கி வைத்து பிறரைப் பாதுகாத்தது. பிளேக் தொற்று நோயால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சையளிப்பதற்காக, சாவித்திரிபாய் புலேயும் அவரது வளர்ப்பு மகனும் மருத்துவருமான யஷ்வந்தும் ஒரு மருத்துவமனையை அமைத்தனர். புனேக்கு அருகிலுள்ள சாசனே மலா (ஹடாப்சர்) என்ற ஊருக்கு வெளியே தொற்றுநோய் பாதிப்புக்கு உட்படாத இடத்தில் அம்மருத்துவமனை இருந்தது.
நோயால் அவதிப்பட்டவர்களைத் தோளில் சுமந்து வந்து மருத்துவமனையில் வைத்தியம் பார்க்க உதவி செய்தார் சாவித்திரி. இப்பணியில் அவருக்கும் நோய்த் தொற்று ஏற்பட்டு மார்ச் 10, 1897 இல் இயற்கை எய்தினார். தன் இறுதி நாள் வரை சமூக மக்களுக்காக சேவை செய்த சாவித்திரிபாய் பிறந்த தினத்தை ஆசிரியர் தினமாகக் கொண்டாட வேண்டும் என பரவலாக கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருகிறது.
அவரது பிறந்த நாளான இன்று அவரது தியாகத்தை நினைவுகூருவோம். இனியும் ஒரு உத்தரகாண்ட் பாணியை உருவாக அனுமதியோம்.











