”கர்நாடகாவில் யார் ஆட்சிக்கு வந்தாலும் தமிழகத்திற்கு எதிராக தான் செயல்படுகிறார்கள்” என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் செங்கொடிபுரத்திலுள்ள கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
இந்த செய்தியாளர் சந்திப்பில் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்ததாவது…
” ஆளுநர் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர், கடிதம் எழுதியிருப்பதற்கு குடியரசுத்தலைவர் என்ன முடிவெடுக்க போகிறார் என்று தெரியவில்லை. அண்ணாமலை ஆளுநரா? , ஆளுநரின் கையாளா? , ஆளுநர் பற்றி முதலமைச்சர் கடிதம் எழுதினால் அண்ணாமலைக்கு என்ன ஆகிறது? இது போன்று அண்ணாமலையின் செயல்கள் கண்டிக்கதக்கது; சமீப காலமாக பாஜகவினர் அதிகம் கைதாகி வருகின்றனர்,
கர்நாடகா அரசு , ”மேகதாதுவில் அணை கட்டுவோம்; எங்களது உரிமை” என கூறுவது ஏற்புடையது இல்லை. கர்நாடகாவில் யார் ஆட்சிக்கு வந்தாலும் தமிழ்நாட்டிற்கு எதிராக தான் செயல்படுகிறார்கள். எந்த சட்ட உரிமையும் இல்லாமல் கர்நாடகாவில் அணை கட்ட
முயற்சிப்பதும், இதற்கு மத்திய நதி நீர்ஆணையம் ஆதரவாக செயல்படுவதும் கண்டிக்கத்தகது. ஆகையால் மேகதாதுவில் அணை கட்டுவதை கிடப்பில் போட வேண்டும்.
பெண்களுக்கு உரிமை தொகை என்பது நல்ல திட்டம் தான்; ஆனால் சில வரையறை வைத்திருக்கிறார்கள். இந்த திட்டம் தொடர்பாக மக்களின் கருத்துக்களை கேட்டு திருத்தம் கொண்டு வரவேண்டும், குடும்பத்தில் ஒருவருக்கு இரண்டு சலுகைகள் என்பது ஏற்று கொள்ள முடியாததுதான், இருந்தாலும் அரசு நிதி நிலைமை ஆகியவைகளை கருத்தில் கொண்டு செயல்படுத்திட வேண்டும்.
மின்சார கட்டணம் உயர்த்தியிருப்பது கூடுதல் சுமையாக இருக்கிறது என பஞ்சாலை உரிமையாளர்கள் கூறுகின்றனர், பஞ்சு விலை உயர்விற்கு மத்திய அரசே காரணம்; அரசு இதுகுறித்து ஆலோசனை செய்து பஞ்சாலைகளை காப்பாற்றிட நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.
சமீபத்தில் ஏற்பட்டுள்ள தக்காளி விலை உயர்வுக்கு அரசு நேரடியாக தலையிடாததே காரணம். இதன் மூலம் பெரிய வர்த்தகர்கள் லாபம் அடைகின்றனர். இதே போல மற்ற எல்லா அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்விற்கு மத்திய அரசின் வரி விதிப்பும் காரணமாக இருக்கின்றது. காய்கறிகளை பொருத்த வரையில் அதிக விலையில்லாமல் போகும் சமயங்களில் விவசாயிகள் சாலைகளில் கொட்டிவிட்டு செல்லும் அவல
நிலைக்கு விவசாயிகள் தள்ளப்படுகிறார்கள்,
டிஜிபி விஜயக்குமார் தற்கொலை சம்பவம் மனதிற்கு வருத்தமளிக்கிறது, ஒரு நல்ல அதிகாரியை காவல்துறை இழந்திருக்கிறது எனத்தெரிவித்தார்.







