நொய்டாவை மையமாக கொண்டு இயங்கும் மரியான் பயோடெக் நிறுவனத்தின் இரண்டு இருமல் மருந்துகளை இனி குழந்தைகளுக்கு பயன்படுத்த கூடாது என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்திய தயாரிப்பு நிறுவனமான மரியான் பயோடெக் உற்பத்தி செய்யும் ஆம்ப்ரோனால் மற்றும் டாக் 1 (Doc-1 Max) ஆகிய இரண்டு இருமல் மருந்தை உட்கொண்ட 19 குழந்தைகள் இறந்ததாக உஸ்பெகிஸ்தான் நாட்டின் சுகாதாரத்துறை அறிவித்தது. அதாவது குழந்தைகள் அதிகப்படியான இருமல் மருந்தை எடுத்துக் கொண்டுள்ளனர். அந்த இரண்டு மருந்துகளில் எத்திலீன் கிளைகால் இருந்துள்ளது. இதனால் சுவாச நோயால் பாதிக்கப்பட்டு இந்த மருந்தை எடுத்துக் கொண்ட 21 குழந்தைகளில் 19 குழந்தைகள் இறந்துள்ளனர்.
ஆரம்பகட்ட ஆய்வகச் சோதனையில், டாக்-1 மேக்ஸ் சிரப்களில் எத்திலீன் கிளைகால் இருப்பது கண்டறியப்பட்டது. இது நச்சுத்தன்மை உடையது. இதனால் நோயாளியின் ஆரோக்கியத்தில் மோசமான பிரச்னைகளை ஏற்படுத்தும்.
இதற்கிடையே உத்தர பிரதேச மரியான் பயோடெக் தயாரிப்பு உரிமத்தை ரத்து செய்துள்ளது. உரிய ஆவணங்களை அந்த நிறுவனம் சமர்ப்பிக்காத காரணத்தினால் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மருந்தக ஆய்வாளர் வைபர் பாபர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், உஸ்பெகிஸ்தான் நாட்டில் 19 குழந்தைகள் மரணம் தொடர்புள்ள மரியான் பயோடெக் நிறுவனத்தின் ஆம்ப்ரோனால் ( AMBRONOL) மற்றும் டாக் 1 (Doc-1 Max) ஆகிய இரண்டு மருந்துகளையும் பயன்படுத்தக்கூடாது என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், மரியான் பயோடெக் நிறுவனத்தின் தயாரிப்புகள் அதற்குரிய வரைமுறைகளை பூர்த்தி செய்யவில்லை அதனால் அதை பயன்படுத்த வேண்டாம் என கூறியுள்ளது.







