சிங்கப்பூரின் புதிய அதிபரான தர்மன் சண்முகரத்னம் யார்..? அவரின் அரசியல் பயணம் எங்கே தொடங்கியது..? – விரிவான அலசல்

சிங்கப்பூரின் 9-வது அதிபராக தர்மன் சண்முகரத்னம் தனது 66 வயதில் பதவி ஏற்றுள்ளார். உலகம் முழுதும் தற்போது பரவலாக பேசக்கூடிய இந்த சண்முகரத்னம் யார்? அவரின் அரசியல் பயணத்தைப் பற்றி பார்க்கலாம் இளமைப்பருவம் இலங்கையை…

சிங்கப்பூரின் 9-வது அதிபராக தர்மன் சண்முகரத்னம் தனது 66 வயதில் பதவி ஏற்றுள்ளார். உலகம் முழுதும் தற்போது பரவலாக பேசக்கூடிய இந்த சண்முகரத்னம் யார்? அவரின் அரசியல் பயணத்தைப் பற்றி பார்க்கலாம்

இளமைப்பருவம்

இலங்கையை பூர்வீகமாக கொண்ட தமிழ் வம்சாவளியை சேர்ந்தவர் தர்மன் சண்முகரத்னம். சிங்கப்பூரின் “நோயியலின் தந்தை” என அழைக்கப்படும் சண்முகரத்னத்தின் மகன்தான் இவர் ஆவார்.

1957-ம் ஆண்டு பிப்ரவர் 25ம் தேதி பிறந்த தர்மன் லண்டன் ஸ்கூல் ஆப் எக்னாமிக்ஸ் கல்வி நிலையத்தில் இளங்கலை பொருளாதார பட்டமும், கேம்பிரிஜ் பல்கலைகழக வொல்ப்சன் கல்லூரியில் முதுகலை பொருளாதார பட்டமும் பெற்றார். பொருளாதாரம் மற்றும் சமூக கொள்கைகளில் ஆர்வம் காட்டும் தர்மன் இளம் வயதில் விளையாட்டு வீரரும் கூட…

அரசியல் பயணத்தில் தர்மன் சண்முகரத்னம்

ஆளும் மக்கள் செயல் கட்சியில் சேர்ந்த தர்மன் 2001 ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அது முதல் 2019-ம் ஆண்டு வரை துணை பிரதமராக பதவி வகித்தார். 2019 முதல் 2023 ம் ஆண்டு வரை மூத்த அமைச்சராகவும் இருந்தார். 2011 முதல் 2023 வரை சிங்கப்பூர் நாணய கழகத்தின் தலைவராகவும், 2019 முதல் 2023 வரை சிங்கப்பூர் அரசாங்க முதலீட்டு கழகத்தின் துணை தலைவராகவும் பணியாற்றினார். மேலும், சிங்கப்பூரில் கடந்த 1ம் தேதி நடைபெற்ற அதிபர் தேர்தலில், 70.04 சதவீத வாக்குகளை பெற்று வெற்றி பெற்ற தர்மன், செப் 14 அன்று சிங்கப்பூர் அதிபராக பதவி ஏற்றார்.

சர்வதேச அளவில் தர்மன்

சிங்கப்பூரை தாண்டி சர்வதேச அளவிலும் பொருளாதாரம் மற்றும் சமூக கொள்கைகளுக்காக பாராட்டுக்களையும் இவர் பெற்றுள்ளார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தர்மன் இப்போது உலகம் முழுவதும் தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்துள்ளார். மேலும் சர்வதேச கவுன்சில்கள் மற்றும் பேனல்களில் தர்மன் ஒரு முக்கிய நபராக இருந்துள்ளார். சிங்கப்பூர் வரலாற்றில் இதற்கு முன்னதாக 8 பேர் அந்நாட்டின் அதிபர்களாக பதவி வகித்துள்ள நிலையில், சுமார் 70 சதவிகித வாக்குகள் பெற்று வென்றவர் என்ற பெருமையை தர்மன் சண்முகரத்னம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சிங்கப்பூரில் அதிபராக பதவி ஏற்ற தமிழ்வம்சாவளியை சேர்ந்த முதல் நபர் தர்மன் சண்முகரத்னம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சீனப்பெண்ணை மணந்த தமிழன்

சீன-ஜப்பானிய வம்சாவளியைச் சேர்ந்த ஜேன் யூமிகோ இட்டோகி என்பவரை தர்மன் சண்முகரத்னம் திருமணம் செய்து கொண்டார். சிங்கப்பூர் வழக்கறிஞரான ஜேன் யூமிகோ இட்டோகி சமூக சேவையிலும், கலைத் துறையிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இந்த தம்பதிக்கு ஒரு மகள் மற்றும் மூன்று மகன்கள் உள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.