கேன் வில்லியம்சன் இல்லாத குறையை கிள்ளி எறிந்த இந்திய வம்சாவளி வீரர்; இங்கிலாந்துடனான இறுதிப் போட்டியை பாரில் கண்டுகளித்த ரச்சின், நடப்பாண்டு உலகக் கோப்பை தொடரில் அதே இங்கிலாந்தை துவம்சம் செய்தது எப்படி?
யார் இந்த ரச்சின் ரவீந்தர்?
Political Influence, Selection criteria உள்ளிட்ட சில வார்த்தைகளால் அவ்வப்போது வருத்தெடுக்கப்படுவது தான் இந்திய கிரிக்கெட் சங்கமும், அதன் செலக்சன் கமிட்டி உறுப்பினர்களும். அனைத்து விதமான கிரிக்கெட்டிங் பார்மேட்டிலும், உலகின் முதல் நிலை அணியாக தொடர்ந்து வரும் இந்திய கிரிக்கெட் அணியின் வளர்ச்சி கடந்த சில வருடங்களாக தொடர் வளர்ச்சி பெற்று வந்தாலும், சமீப காலமாக இந்திய வம்சாவளியினர் உலகின் பல்வேறு கிரிக்கெட் அணிகளில் இணைந்து விளையாடி வருவது மிகவும் வாடிக்கையான ஒன்றாகி விட்டது.
நாம் முன்பு கூறியது போல அரசியல் பின்புலம், தேர்வுக்குழுவுக்கு சாதகமான நபர்களை மட்டுமே முக்கிய போட்டிகளில் விளையாட வைப்பது உள்ளிட்ட விமர்சனங்களை பல்வேறு தரப்பினர் பிசிசிஐ மீது வைத்து வரும் அதே வேளையில், இதுபோன்ற இந்திய வம்சாவளியினர் அல்லது இந்திய கிரிக்கெட் வீரர்கள் வெளி நாட்டு அணிகளில் தங்கள் பங்களிப்பையும் முழு உழைப்பையும் கொடுத்து ஜொலித்து வருவது இப்போது பேசுபொருளாகி இருக்கிறது.
முன்னதாக இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் நாசர் உசைன் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். அதிலும் குறிப்பாக அவர் தமிழ்நாட்டில், சென்னையில் பிறந்தவர் ஆவார். அதே போல தென்னாபிரிக்கா அணியின் முன்னாள் வீரர் ஹாசிம் ஆம்லா குஜராத்தை சேர்ந்த இஸ்லாமிய குடும்பத்தை சேர்ந்தவர் ஆவார். அதே போல நியூசி அணியின் இஷ் சோதி, ஜீதன் படேல், அஜாஸ் படேல் மற்றும் இங்கிலாந்து அணியின் ரவி போபேரா, மேற்கிந்திய தீவுகள் அணியின் ரோஹன் உள்ளிட்டோர், தென்னாபிரிக்கா அணியின் கேசவ் மகாராஜ் மற்றும் தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட முத்துசாமி ஆகியோர் இந்திய வம்சாவளியை பின்புலமாக கொண்டவர்கள்.
இந்த டிரெண்ட் இப்போது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், 2012 U19 உலகக் கோப்பை வென்ற இந்திய அணியின் கேப்டன் உன்முகுந்த் சந்த் அமெரிக்கா அணியில் விளையாடி வருகிறார். இந்திய கிரிக்கெட் அணியில் தொடர் வாய்ப்புக்காக காத்திருந்த முரளி விஜய் கூட, வெளிநாட்டு அணிகளுக்காக விளையாடபோவதாக தகவல்கள் பரவின. இவைகளெல்லாம் ஒருபுறம் இருக்க, இப்போது இந்திய வம்சாவளியை சேர்ந்த ரச்சின் ரவீந்தர் இந்திய மக்களிடையே பிரபலமாகி வருகிறார்.
நியூசிலாந்து அணியில் உலகக் கோப்பை தொடருக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள இந்த இளம் வீரர் சொந்த மண்ணிலேயே சம்பவம் செய்ய தொடங்கிவிட்டார். பெங்களூரை பூர்வீகமாக கொண்ட குடும்பத்தில் பிறந்தவர் ரச்சின். ரச்சினின் தந்தை, ஒரு தீவிர கிரிக்கெட் ரசிகராம். தந்தை ரவி கிருஷ்ணமூர்த்தி, ராகுல் டிராவிட் மற்றும் சச்சின் டெண்டுல்கரின் தீவிர ரசிகராக இருந்துள்ளார். எனவே அதனை மையமாக வைத்து தனது மகனுக்கு ரச்சின் என பெயர் சூட்டியுள்ளார். கடந்த 2019ம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் மோதிய இறுதிப்போட்டியை, பெங்களூருவில் உள்ள பாரில் இருந்து கண்டுகளித்த ரச்சின் நேற்று நியூசிலாந்து அணிக்காக களமிறங்கி இங்கிலாந்து அணியை காட்டு, காட்டு என காட்டியுள்ளார்.
இந்த ஆண்டு மார்ச் மாதம், சர்வதேச ஒருநாள் போட்டிகளில் நியூசிலாந்து அணிக்காக களமிறக்கப்பட்ட ரச்சின் ரவீந்தர், குறிப்பிட்ட சில போட்டிகளிலேயே நியூசி அணியின் நம்பிக்கையை வலுப்படுத்த ஆரம்பித்து விட்டார். திறமையான ஆல் ரவுண்டராக இருக்கும் ரச்சின் பந்துவீச்சில் இடது கை ஆர்தோடாக்ஸ் சுழற்பந்து வீச்சாளராக, தனது 13 போட்டிகளில் 13 விக்கெட்டுகள் மற்றும் பேட்டிங் பொறுத்த வரை 312 ரன்கள் அடித்திருக்கிறார்.
அதிலும் லார்ட்ஸ் மைதானத்தில் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற இங்கிலாந்து அணியுடனான ஒருநாள் போட்டியில் 4 விக்கெட்டுகள் வீழ்த்தி 61 ரன்கள் அடித்து அசத்தியுள்ளார். இந்த திறன் அவரது உலகக் கோப்பை தொடருக்கான வாய்ப்பை உறுதி செய்த மறு கணமே இந்தியாவில் உலகக் கோப்பை தொடரில் விளையாட விரைந்த ரச்சின் ரவீந்திரா, நேற்று நடைபெற்ற இங்கிலாந்து அணியுடனான தனது முதல் போட்டியில், பேட்டிங்கில் ருத்ர தாண்டவம் ஆடினார்.
டேவான் கான்வே உடனான அசத்தலான பார்ட்னர்ஷிப் நியூசி அணியை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்த அதே சமயம் ரச்சின் மட்டும் 96 பந்துகளில் 123 ரன்கள் விளாசி அசத்தினார். அதிலும் அவரது ஸ்ட்ரைக் ரேட் 128 ஆகும். தனது சொந்த மண்ணில், இன்னொரு அணிக்காக விளையாடுவதும், சொந்த மக்கள் முன்பு தனது அணிக்கான பங்களிப்பை வெற்றிகரமாக கொடுப்பதும் ஒரு நல்ல வீரருக்கான மொத்த மகிழ்ச்சியின் அடையாளமாகும். நேற்றைய தினம் தனது பெற்றோர் முன்பு அதனை மிகச் சிறப்பாக செய்து, தனது முதல் உலகக் கோப்பை போட்டியிலேயே ஆட்ட நாயகன் விருதினை கைப்பற்றினார் ரச்சின்.
துடிப்பான பேட்டிங், அதாவது இடதுகை வீர்கள் பேட்டிங் செய்வதை பார்ப்பதே அற்புதமானது எனும் போது ரச்சின் பேட்டிங் பாவனைகளை பார்க்கும் போது யுவராஜ் சிங் மற்றும் ஒரு இடதுகை சேவாக் போன்ற உணர்வுதான் வருகிறது. நல்ல பொசிசன், சிறப்பான புட் மூவ்மெண்ட், பயம் அறியா கையாளும் முறை என அனைத்திலும் நல்ல அனுபவம் கொண்ட தோற்றத்தில் தான் ரசின் நேற்று விளையாடினார். லேட் கட், கவர் டிரைவ் ஆடும் போது உடலை தனித்து விளையாடுவது என ஒவ்வொன்றும் நல்ல அனுபவம் வாய்ந்த வீரருக்கான தகுதிகளை அவ்வபோது வெளிப்படுத்தின.
இந்திய அணியின் முன்னாள் வீரர் அணில் கும்ப்ளே கூட வர்ணனையின் போது, ரச்சின் விளையாடும் விதம் யுவராஜ் சிங்கை போல உள்ளது என பேசியிருக்கிறார். குறிப்பாக போட்டிக்கு பின் பேசிய ரச்சின் ரவீந்தர், தனக்கு ராகுல் திராவிட் மற்றும் சச்சின் ஆகிய பெரிய ஜாம்பவான்களின் பெயரை வைத்திருப்பது மகிழ்ச்சி என்றும், விராட் கோலி தான் தனக்கு பிடித்த வீரர் என்றும் தெரிவித்துள்ளார். மற்றும் நேற்று இந்தியாவில் தனது பெற்றோர்கள் முன்னிலையில் சிறப்பாக விளையாடியது அவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தரும் எனவும் பேசியுள்ளார்.
பொதுவாகவே இந்திய மண்ணில் இருந்து வெளிநாட்டு அணிகளுக்கு சென்று விளையாடி வருபவர்கள் மீதான கவனம் அதிகம் எழுந்துள்ள நிலையில், தற்போது இந்த உலகக் கோப்பை தொடரில் நியூசிலாந்து அணியின் சொக்கத் தங்கமான ரச்சின், இப்போது இந்திய ரசிகர்களுக்கு ஃபேவரைட் ஆகியிருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். இந்த 23 வயது இளம் வீரரின் முழுமையான திறன் இன்னும் பல போட்டிகளில் பல பரிமாணங்களை வெளிக்காட்ட காத்திருக்கிறது. குறிப்பாக இந்திய ரசிகர்கள் வரும் 22 ஆம் தேதி தர்மசாலா மைதானத்தில் இந்தியா, நியூசி அணிகளுக்கு இடையேயான போட்டியில் ரச்சின் பங்களிப்பை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.
நேற்று நியூசி அணியின் டாஸ் தேர்வு அந்த அணிக்கு பக்கபலமாக இருந்தது. குறிப்பாக அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் இல்லாததை ரச்சின் நிரப்பி விட்டார் என்றுதான் ஒவ்வொருவரும் அவரை பாராட்டி வருகின்றனர். அதுமட்டும் இன்றி, உலகக் கோப்பை அறிமுகப் போட்டியில் சதம் விளாசிய முதல் இளம் வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். அவரது திறனை மேலும் நிரூபிக்க இந்த உலகக் கோப்பை மிகச்சிறந்த வாய்ப்பாகும். ரச்சின் தொடர்ந்து இதுபோன்ற இன்னிங்ஸ்களை விளையாடி வந்தால், வெகு விரைவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த சிறந்த முன்னணி வீரர்களின் பட்டியலில் நிச்சயம் இடம்பெற்று விடுவார்.







