“முதல்வன்” பட பாணியில் குஜராத்தில் நடக்குமா திருப்பம்?: யார் இந்த இசுதான் காத்வி?

அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளைப்  போல் தேர்தலுக்கு முன்பாகவே ஒரு குட்டி தேர்தலை நடத்தி குஜராத்தில் முதலமைச்சர் வேட்பாளரை தேர்வு செய்திருக்கிறது ஆம் ஆத்மி.  எஸ்.எம்.எஸ், இ-மெயில், வாய்ஸ் மெயில், வாட்ஸ் ஆப் உள்ளிட்ட…

அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளைப்  போல் தேர்தலுக்கு முன்பாகவே ஒரு குட்டி தேர்தலை நடத்தி குஜராத்தில் முதலமைச்சர் வேட்பாளரை தேர்வு செய்திருக்கிறது ஆம் ஆத்மி. 

எஸ்.எம்.எஸ், இ-மெயில், வாய்ஸ் மெயில், வாட்ஸ் ஆப் உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் பொதுமக்கள் தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையில் முதலமைச்சர் வேட்பாளரை தேர்ந்தெடுத்து அறிவித்திருக்கிறது ஆம்ஆத்மி. இந்த அறிவிப்பை வெளியிடுவதற்காக அகமதாபாத் நகரில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக் கூட்டத்தில் பேசிய ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், ”மொத்தம் 16 லட்சத்து 48 ஆயிரத்து 500 பேர் தங்களின் கருத்துக்களை தெரிவித்திருந்தனர். அதில் 73 சதவீத வாக்குகளை பெற்ற இசுதான் காத்வி ஆம் ஆத்மியின் முதலமைச்சர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்” என அறிவிக்க கூட்டத்தில் தொண்டர்கள் பெரும் ஆர்ப்பரிப்போடு அதனை வரவேற்றனர்.

யார் இந்த இசுதான் காத்வி?

பஞ்சாபில் ஒரு நடிகரை முதலமைச்சர் வேட்பாளராக களம் இறக்கி ஆட்சியை பிடித்த ஆம் ஆத்மி, குஜராத்தில் ஒரு பத்திரிக்கையாளரை களம் இறக்கியுள்ளது. குஜராத் மாநிலத்தின் துவார்கா மாவட்டத்தில் உள்ள, பிபாலியா கிராமத்தைச் சேர்ந்த இசுதான் காத்வியின் தந்தை ஒரு விவசாயி. அகமதாபாத்தில் உள்ள குஜராத் வித்யாபீத் கல்லூரியில் கடந்த 2005ம் ஆண்டு இதழியலில் முதுகலை பட்டம் பெற்றக் கையோடு ஒரு ஊடகவியலாளராக தனது பயணத்தை  தொடங்கினார் இசுதான் காத்வி. முதலில் தூர்தர்ஷினில் பணியாற்றி அவர், பின்னர் பேர்பந்தரில் ETV குஜராத்தியில்  செய்தியாளராக பணியாற்றினார். செய்தியாளராக பணியாற்றி காலத்தில், சட்டவிரோத காடுகள் அழிப்பு நடவடிக்கைகளையும் அதன் மூலம் நடைபெற்ற ஊழலையும் அம்பலப்படுத்தி பொதுமக்களிடையே பிரபலமானார். மேலும் விவசாயிகள் சந்திக்கும் பல்வேறு பிரச்சனைகளையும் குஜராத் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றதன் மூலம் கிராமங்களிலும் இசுதான் காத்வி பெயர் பிரபலமானது.

இதையடுத்து குஜராத்தின் முன்னணி தொலைக்காட்சி சேனல்களில் ஒன்றான விடிவியில் முக்கிய விவாத நிகழ்ச்சியின் நெறியாளராக சேர்ந்த காத்வி,  பின்னர் அந்த தொலைக்காட்சியின் தலைமை ஆசிரியராக உயர்ந்தார். குஜராத் தொலைக்காட்சி வரலாற்றில் மிக இளம் வயதில் தலைமைப் பொறுப்பிற்கு வந்தவர் என்கிற பெருமையும் அவருக்கு கிடைத்தது. அந்த தொலைக்காட்சியின் விவாத நிகழ்ச்சியில், பல்வேறு மக்கள் பிரச்சனைகளை விவாதித்திற்கு எடுத்துக்கொண்டு விறுவிறுப்பாக விவாதித்தன் மூலம் மக்களிடையே மேலும் பிரபலமடைந்தார் இசுதான் காத்வி. ஒரு ஊடகவியலாளராக புகழின் உச்சத்தில் இருந்த நிலையில் அவருக்கு பல்வேறு கட்சிகளிலிருந்து அழைப்பு வந்தது. இந்நிலையில் கடந்த ஆண்டு ஜூன் 14ந்தேதி ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்து அவரது முன்னிலையில்  ஆம் ஆத்மியில் இணைந்தார் காத்வி.

குஜராத்தில் முதல் முறையாக சட்டப்பேரவை தேர்தல் களத்தில் இறங்க காத்திருந்த ஆம் ஆத்மிக்கு  முக்கிய பிரபலமான இசுதான் காத்வியின்  வருகை உற்சாகமளித்தது. கட்சியில் சேர்ந்த உடனேயே அவருக்கு தேசிய இணைப் பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. தொடர்ந்து கட்சி பணிகளில் சுறுசுறுப்பு காட்டி வந்த காத்வி, கடந்த மாதம் தனது சொந்த மாவட்டமான துவார்கா மாவட்டத்திலிருந்து மாற்றத்தை வலியுறுத்தி அரசியல் யாத்திரையை தொடங்கினார். வரும் 20ந்தேதி வரை நடைபெற உள்ள இந்த யாத்திரையில் மொத்தம் 67 தொகுதிகளில் மக்களை சந்திக்க திட்டமிட்டுள்ளார்  இசுதான் காத்வி.

முதல்வன் படத்தில் முதலமைச்சரை பேட்டி எடுக்கும் ஊடகவியலாளரான அர்ஜூன் பின்னர் முதலமைச்சராகவே மாறுவார். அந்த கற்பனை நிஜத்தில் அரங்கேறுமா என்பதை டிசம்பர் 8ந்தேதி வெளியாக உள்ள குஜராத் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் தெரிவித்துவிடும்.

-எஸ்.இலட்சுமணன் 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.