சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நேற்று (24-09-26) நிலவிய தீவிரக் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் (Deep Depression) இன்று காலை 0530 மணி அளவில் வலுவிழந்து, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக தெற்கு உள் ஒடிசா மற்றும் அதனை ஒட்டிய சத்தீஸ்கர் பகுதிகளில் நிலவியது. இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று (25-09-26) 0830 மணி அளவில் தெற்கு சத்தீஸ்கர் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு உள் ஒடிசா (Depression) பகுதிகளில் நிலவுகிறது.
இதன் காரணமாக தமிழ்நாட்டில் இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி, நாமக்கல், ஈரோடு, கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும்.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் இன்று இரவு 7 மணி வரை 3 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் நீலகிரி, தென்காசி, கோவை ஆகிய 3 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.




