மாலை 4 மணி வரை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

தமிழ்நாட்டில் இன்று மாலை 4 மணி வரை 2 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சராசரி கடல் மட்டத்தில் தெற்கு குஜராத்திலிருந்து கேரளம் வரை ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது. இதன் காரணமாக நேற்று முன் தினம் வடமேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு ஓடிசா-மேற்கு வங்காள கடலோர பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி நேற்று (05-07-2026) காலை 08.30 மணி அளவில் அதே பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து , வடக்கு ஒடிசா கடலோரத்தில் சந்த்பாலி மற்றும் பாலசோர்க்கு அருகில் உள்ள திகாவிர்க்கு இடயே கரையை கடக்கக்கூடும். இது மேலும் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, 24 மணி நேரத்தில் வடக்கு ஒடிசா மற்றும் வடக்கு சத்தீஸ்கர் பகுதிகளை நோக்கி நகரக்கூடும்.

இதன் காரணமாக இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் இன்று மாலை 4 மணி வரை 2 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் கோவை, நீலகிரி ஆகிய 2 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.