தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்துக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி அக்.24 ல் வலுபெற்று அக். 25ல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளது.
இதன் காரணமாக, தமிழகத்தின் செங்கல்பட்டு, சென்னை, கடலூர், ஈரோடு, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், நாமக்கல்,பெரம்பலூர், சேலம், திருவள்ளூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி பகுதிகளிலும் இடியுடன் கூடிய மழை மற்றும் மின்னலுடன் கனமழை பெய்யக்கூடும்.
தமிழகத்தின் அரியலூர், கோயம்புத்தூர், தருமபுரி, மதுரை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சாவூர், நீலகிரி, திருவாரூர், தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதியில் இடியுடன் கூடிய மழை மற்றும் மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.” என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.




