தீவிரப் புயலாக வலுப்பெற்ற அக்வான்!
தெற்கு வங்கக்கடலின் மத்தியப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய அக்வான் (Akvan) புயல், வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து நேற்று (நவம்பர் 18) காலை 5.30 மணியளவில் தீவிரப் புயலாக வலுப்பெற்றது. தொடர்ந்து, நேற்று காலை 8.30 மணியளவில் அதே பகுதியில் நிலவியது.
நவம்பர் 20-ல் கரையைக் கடக்க வாய்ப்பு!
அக்வான் தீவிரப் புயல் மேலும் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நவம்பர் 20-ம் தேதி நண்பகல் நரசாபூர் மற்றும் பூரிக்கு இடையே வடக்கு ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெற்கு ஒடிசா கடற்கரையைக் கடக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. அப்போது மணிக்கு 90 முதல் 100 கி.மீ. வேகத்திலும், இடையிடையே மணிக்கு 110 கி.மீ. வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அரபிக்கடலில் வளிமண்டல சுழற்சி!
மேலும், சுமார் 3.1 கி.மீ. உயரம் வரை தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவுப் பகுதிகளின் மேல் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் லேசான மழை!
இதன் காரணமாக தமிழ்நாட்டில் இன்று (19-11-2026) தென் தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். மற்ற தமிழக மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.




