11வது உலகத்தமிழ் மாநாடு 2023ஆம் ஆண்டு ஜூலை மாதம் சார்ஜாவில் நடைபெறும் என உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.
உலகின் தொன்மையான வரலாறும், பெருமையும், இலக்கியச் செறிவும் கொண்ட செம்மொழியான தமிழ் மொழியின் வளர்ச்சிக்காகவும், தமிழ் மொழிக்கு உலகளாவிய அளவில் மேலதிக ஈர்ப்பை உருவாக்குவதற்கும், அறிவியல் ஆதாரங்களுடன் தமிழர் தம் வரலாற்றை நிலைநிறுத்தும் சான்றுகள் வெளிக்கொண்டு வருவதற்குமான தளம் அமைத்து உலகத்தமிழ் மாநாடு தருகிறது.
தனிநாயகம் அடிகள் உள்ளிட்ட தமிழறிஞர்களின் முயற்சியால் டில்லியில் 1964 இல் உருவானதுதான் உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம். உலகத் தமிழறிஞர்களை ஒன்றிணைத்து அவர்களது ஆராய்ச்சிகளை உலகறியச்செய்யும் வகையில், இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகத் தமிழ் மாநாடு நடத்தவும் உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம் தொடங்கிய போது திட்டமிடப்பட்டு, உலகத்தமிழ் மாநாடுகள் நடத்தப்பட்டு வருகின்றது.
உலக தமிழ் முதல் மாநாடு, கோலாலம்பூரில் 1966ஆம் ஆண்டு ஏப்ரல் 16 – 23 வரை நடைபெற்றது. இரண்டாம் 1968ம் ஆண்டு ஜனவரி 3 முதல் 10ஆம் தேதி வரை சென்னையில் நடத்தப்பட்டது. மூன்றாம் மாநாடு – 1970ம் ஆண்டு, ஜனவரி 15 முதல் 18 ஆம் தேதி வரை பிரான்ஸ் நாட்டின் பாரிஸில் நடைபெற்றது.
நான்காம் மாநாடு, இலங்கை யாழ்ப்பாணத்தில் 1974ம் ஆண்டு ஜனவரித் 3 முதல் 9ம் தேதி வரை நடைபெற்றது. 5ம் மாநாடு, 1981ம் ஆண்டு ஜனவரி 4 முதல் 10ம் தேதி வரை மதுரையில் நடைபெற்றது. 6வது மாநாடு, மலேசிய நாட்டின் தலைநகர் கோலாலம்பூரில் 1987ம் ஆண்டு நவம்பர் 15 முதல் 19ம் தேதி வரை நடைபெற்றது.
7வது மாநாடு, மொரீசியஸ் நாட்டின் தலைநகர் போர்ட் லூயிசில் 1989ம் ஆண்டு டிசம்பர் 1 முதல் 8ம் தேதி வரை நடைபெற்றது. 8வது மாநாடு, 1995ஆம் ஆண்டு தஞ்சாவூரில் நடத்தப்பட்டது. 9வது மாநாடு, 2015ம் ஆண்டு ஜனவரி 29 முதல் பிப்ரவரி 1 வரை மலேசியத் தலைநகரான கோலாலம்பூரில் நடைபெற்றது. 10வது மாநாடு, அமெரிக்க நாட்டின் சிகாகோ நகரில் 2019ம் ஆண்டில் ஜூலை 5 முதல் 7 வரை நடத்தப்பட்டது. இதுவரை 10 உலக தமிழ் மாநாடுகள் நடைபெற்றுள்ளன.
இந்நிலையில், தற்போது பதினோராவது உலக தமிழ் மாநாடு 2023 ஜூலை மாதத்தில் சார்ஜாவில் நடைபெறும் உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.








