”பெயர்களை மட்டும் மாற்றினால் என்ன நடக்கப் போகிறது..? நாட்டிற்கு எதையாவது கொடுக்க வேண்டும் என்று விரும்பினால் இளைஞர்களுக்கு வேலையை கொடுங்கள்” என மாநிலங்களவையில் எதிர்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கேள்வி எழுப்பியுள்ளார்.
நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்று முதல் 22 ஆம் தேதி வரை 5 அமர்வுகளாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அமர்வை அறிவிக்கும் போது, நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, இதை “சிறப்பு அமர்வு” என்று விவரித்தார். ஆனால் இது வழக்கமான கூட்டத்தொடர் என்றும், தற்போதைய மக்களவையின் 13-வது அமர்வு என்றும், மாநிலங்களவையின் 261வது அமர்வு என்றும் அரசு பின்னர் தெளிவுபடுத்தியது.
நாடாளுமன்றத்தில் சிறப்பு கூட்டத்தொடர் இன்று தொடங்கியுள்ளது. பழைய கட்டடத்தின் கடைசி நாளாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை புதிய கட்டடத்தில் கூட்டம் தொடங்கவுள்ளது. இந்த நிலையில், நாடாளுமன்றத்தின் 75 ஆண்டுகால வரலாறு குறித்த விவாதத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்து உரையாற்றினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கூட்டத் தொடர் நடைபெற்று வரும் நிலையில் மாநிலங்களவையில் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், எதிர்கட்சி தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே உரையாற்றினார். அவர் தெரிவித்ததாவது..
“எல்லாவற்றையும் இந்த அரசு மாற்ற வேண்டும் என நினைக்கிறது, நீங்கள் மாற்ற விரும்பினால் தற்போதைய கொடுமையான நிலைமையை மாற்றுங்கள், பெயர்களை மட்டும் மாற்றினால் என்ன நடக்கப் போகிறது..? நாட்டிற்கு எதையாவது கொடுக்க வேண்டும் என்று விரும்பினால் இளைஞர்களுக்கு வேலையை கொடுங்கள், உங்களால் எதவும் செய்ய முடியாவிட்டால் உங்கள் நாற்காலியை விட்டுவிடுங்கள்.
இது எதுவும் செய்யாமல் நீங்கள் எதிர்க்கட்சிகளை பயமுறுத்தினால் என்ன நடக்கப் போகிறது..? உங்கள் ஆட்சியின் பெருமைகளை பேசிக்கொண்டு மக்களை மேலும் கொடுமைப்படுத்தாதீர்கள். மக்கள் ஆட்சி மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள்.
2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் ஆட்சியில் இருந்து மோடி வெளியேறுவதற்கான பாதையை இந்திய மக்கள் அமைக்கத் தொடங்கியுள்ளனர். ஜி-20 மாநாடு முடிந்து விட்டதால் உள்நாட்டு பிரச்சினைகளில் மோடி அரசு கவனம் செலுத்த வேண்டும். புதிய நாடாளுமன்றத்துக்கு செல்கின்ற இந்த தருணத்திலாவது உங்கள் அரசியல் போக்கை மாற்றிக் கொள்ளுங்கள். மோடி வெளிநாடு சுற்றுப்பயணங்கள் செல்கிறார். ஆனால் மணிப்பூருக்கு செல்ல மறுக்கிறார்.
பலமான எதிர்க்கட்சி இல்லையெனில் நமது அமைப்பில் குறைபாடுகள் உள்ளது என ஜவஹர்லால் நேரு சொல்வார். வலுவான எதிர்க்கட்சி இல்லை என்றால், அது சரியான அமைப்பாக இருக்காது. ஆனால் தற்போது வலுவான எதிர்க்கட்சி உள்ளது. ED, CBI மூலம் எதிர்கட்சிகளை வலுவிழக்கச் செய்வதில்தான் கவனம் இந்த அரசு கவனம் செலுத்தி வருகிறது.” என மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.