ஊழலை பற்றி பேச பிரதமர் மோடிக்கு என்ன தகுதி உள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாகை எம்பி செல்வராஜ் மகளின் திருமண நிகழ்வில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது மணமக்களை வாழ்த்திய அவர் மேடையில் பேசியதாவது:
எம்பி செல்வராஜ் மகளின் திருமண நிகழ்வில் கலந்து கொள்ளும் வாய்ப்பை பெற்றதற்கு பெருமகிழ்ச்சி அடைகிறேன். நாடாளுமன்றத் தேர்தலில் தற்போது உள்ள INDIA கூட்டணி தொடர்ந்து நீடிக்கும். அதை நான் உறுதியாக சொல்கிறேன். இந்திய ஜனநாயகம் காப்பாற்றப்பட வேண்டும். இன்று சர்வாதிகார பாசிச ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிற பாஜக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இந்தியாவை காப்பாற்ற வேண்டிய நிலையில் உள்ளோம். அதற்காக தான் இந்தியா கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 31, செப்டம்பர் 1 ஆம் தேதி மும்பையில் இந்திய கூட்டணியின் மூன்றாவது கூட்டம் நடைபெற உள்ளது. அதில் நானும் பங்கேற்க உள்ளேன். தமிழ்நாட்டில் ஒரு நல்ல ஆட்சி உருவாக்கிட அனைவரும் காரணமாக இருந்தீர்கள். அதே போல் மத்தியில் நாடாளுமன்றத் தேர்தலின் மூலம் ஒரு நல்ல மத்திய அரசு அமைய நீங்கள் காரணமாக இருக்க வேண்டும். நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தை இந்த திருமணத்தில் தொடங்கி வைக்க வேண்டும் என சிபிஐ மாநில செயலர் முத்தரசன் குறிப்பிட்டார்.
திருவாரூரில் தான் தேர்தல் பிரச்சாரம் தொடங்க வேண்டும் என நினைத்தேன். அதே போல் இந்த மேடையில் நின்று பிரச்சாரத்தை தொடங்கி உள்ளேன். வெளிநாடுகளில் இருக்கக்கூடிய கருப்பு பணத்தை எல்லாம் கைப்பற்றி இந்தியாவிற்கு கொண்டுவந்து நாட்டு மக்கள் அத்தனை பேருக்கும் 15 லட்சம் ரூபாய் கொடுக்கப் போகிறேன் என அறிவித்தார் மோடி. நான் பல கூட்டங்களில் கேட்டேன் 15 லட்சம் வேண்டாம் ஒரு 15 ஆயிரம் மட்டுமாவது அல்லது 15 ஆயிரம் கூட வேண்டாம் 15 ரூபாயாவது கொடுத்தாங்களா?
நாட்டில் இருக்கக்கூடிய இளைஞர்களுக்கு எல்லாம் வேலை வாய்ப்பு தருவோம் என்றார். ஆனால் செய்தார்களா வேலைகள் பறிக்கப்பட்டுள்ளது. இதுதான் இந்த ஆட்சியின் நிலைமை. மதக்கலவரத்தை ஏற்படுத்தி நாட்டைப் பிளவுபடுத்தும் கொடிய ஆட்சி நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்தியா கூட்டணி உருவாக தமிழகத்தில் உள்ள கூட்டணிக் கட்சிகள் காரணமாக உள்ளன.
ஊழலைப் பற்றி பேச மோடிக்கும் பிஜேபிக்கும் என்ன அருகதை உள்ளது? இன்று சிஏஜி அறிக்கையில் பாஜக ஆட்சி ஊழல் ஆட்சி என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊழல் பெருத்துள்ளது என சிஏஜி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏழு விதமான ஊழல்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. ஆயுஷ்மான் பாரத் திட்டம், கிராமப்புற அமைச்சகத்தின் ஆய்வு திட்டம், விமான வடிவமைப்பு திட்டம், சுங்கச்சாவடி திட்டம் ஆகியவற்றில் ஊழல் நடந்துள்ளது.
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் போலியான செல்போன் நம்பர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த நம்பரில் 7 லட்சம் பயனாளிகள் இணைக்கப்பட்டு மோசடி நடைபெற்றுள்ளது. இந்தத் திட்டத்தில் இறந்த 88 லட்சம் பேருக்கு சிகிச்சையும், இறந்த இரண்டு லட்சத்திற்கு மேற்பட்டோருக்கு காப்பீடு தொகையும் வழங்கப்பட்டு முறைகேடு நடைபெற்றுள்ளதாக சிஏஜி குறிப்பிட்டுள்ளது.
பாரத் மாலா திட்டத்தில் சாலைகளுக்கு நிர்ணயித்ததை விட இரண்டு மடங்கு கூடுதல் தொகை வழங்கப்பட்டுள்ளது. துவாரகா விரைவு நெடுஞ்சாலை திட்டத்தில் 278 மடங்கு கூடுதல் செலவிடப்பட்டுள்ளது. சுங்கச்சாவடிகளில் முறைகேடான வசூல் நடைபெற்று உள்ளது. நாடு முழுவதும் உள்ள 600 சுங்கச்சாவடியில் ஐந்தில் மட்டும் சிஏஜி ஆய்வு செய்துள்ளது. இது போன்ற பாஜக அரசின் முறைகேடுகள் குறித்து, திமுக அரசும், அதன் கூட்டணி கட்சிகள் பேசுகின்றது.
இதனால் ஆத்திரமடையும் பாஜக அரசு வருமான வரித்துறை, அமலாக்கத் துறைகளை ஏவி வருகிறது. இதைக் கண்டு அஞ்சுகிற கட்சி திமுக அல்ல. திமுக பனங்காட்டு நரி, சலசலப்புகளுக்கெல்லாம் அஞ்சாது. தமிழக மக்களை இந்திய மக்களை மோடி அரசு இனியும் ஏமாற்ற முடியாது.
சொன்னதை மட்டுமல்ல சொல்லாததையும் செய்யக்கூடியது திமுக ஆட்சி. வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதி மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும். ஒரு கோடிக்கு மேற்பட்டோருக்கும் வழங்கப்பட உள்ளது. இந்த உரிமைத்தொகை யார் யாருக்கு சேர வேண்டுமோ அவர்களுக்கு கண்டிப்பாக சென்றடையும். இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். இதனை அடுத்து திருவாரூரில் இருந்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திருச்சி புறப்பட்டார்.







