LGBTQIA+, மருவிய பாலினத்தவர்களுக்கு ஒரே கொள்கையை வகுப்பதில் உள்ள சிக்கல் என்ன? – தமிழ்நாடு அரசு விளக்கமளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

LGBTQIA PLUS மற்றும் மருவிய பாலினத்தவர்களுக்கு ஒரே கொள்கையை வகுப்பதே முறையாக இருக்கும் என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

LGBTQIA PLUS (எல்.ஜி.பி.டி.க்யூ.ஐ.ஏ ப்ளஸ்) சமுதாயத்தினரின் உரிமைகள் பாதுகாப்பு தொடர்பான வழக்கு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. தமிழக அரசுத்தரப்பில், LGBTQIA PLUS சமூகத்தினருக்கான கொள்கை இறுதி வடிவம் பெறும் நிலையில் இருப்பதாகவும், சம்பந்தப்பட்ட பிற துறைகளின் கருத்துக்கள் கோரப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

பிற துறைகளின் கருத்துக்களின் அடிப்படையில், கொள்கை வகுத்து, அமைச்சரவையின் ஒப்புதலை பெற்று அறிவிக்கப்படும் என்றும் அரசுத்தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும், சமூகத்தில் தொடர்ச்சியாக பாரபட்சமாக நடத்தப்படும் மருவிய பாலினத்தவருக்கான தனிக் கொள்கையை வகுப்பது என்று அரசு முடிவு செய்துள்ளதாகவும், அதற்கான தனி வரைவு கொள்கையும் வகுக்கப்பட்டுள்ளதாகவும் அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதைக் கேட்ட நீதிபதி, மருவிய பாலினத்தவர்களுக்கான இட ஒதுக்கீடு உள்ளிட்ட அம்சங்களுடன் கூடிய LGBTQIA PLUS மற்றும் மருவிய பாலினத்தவர்களுக்கான ஒரே கொள்கையை வகுப்பதே முறையாக இருக்கும் என தெரிவித்த நீதிபதி, LGBTQIA PLUS சமூகத்தினருக்கான வரைவு கொள்கையையும், மருவிய பாலினத்தவர்களுக்கான வரைவு கொள்கையையும் சமர்ப்பிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.

மேலும், இந்த இரு பிரிவினருக்கும் ஒரே கொள்கையை வகுப்பதில் என்ன சிக்கல் உள்ளது என்பது குறித்தும் விளக்கம் அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை பிப்ரவரி 17ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.