’தனது அனைத்து படங்களிலும் சமூக நீதிக்கான அரசியல் இருக்கும்’ எனக் கூறியுள்ள மாரி செல்வராஜின் படங்கள் சமூகத்தல் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை பற்றியும், விளிம்புநிலை மக்களின் கதைக்களம் எப்படி வெற்றிக்கதையாகிறது என்பதை பற்றியும் இக்கட்டுரையில் காண்போம்.
இயக்குநர் மாரி செல்வராஜ் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள, புளியங்குளம் கிராமத்தை சேர்ந்தவர். விவசாய குடும்பத்தைச் சேர்ந்த இவர் கல்லூரி படிப்பை பாதியில் விட்டுவிட்டு சென்னைக்கு வந்து, இயக்குநர் ராமின் அலுவலக உதவியாளராக இருந்து பின்னர் ’கற்றது தமிழ்’ உள்ளிட்ட திரைப்படங்களுக்கு உதவி இயக்குநராக பணியாற்றினார்.
ஆரம்ப காலங்களில் ராமின் அலுவலகத்தில் இருந்த மாரி செல்வராஜ்-க்கு புத்தகங்களைப் படிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. மேலும் புத்தகங்களைப் படிப்பதையே இயக்குநர் ராம் தனக்கு வேலையாக கொடுத்ததாகவும் மாரி செல்வராஜ் பின்னாளில் கூறியுள்ளார்.
எழுத்தாளர் மாரி செல்வராஜ்
”உங்களால் நம்ப முடியாது என் இருப்பு என்பது எவர் ஒருவரால் சாத்தியமானதோ! உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாத என் இருத்தலுக்கான இந்த அறிவிப்பும் அவராலேயே சாத்தியமானது. இனி நிகழப் போகும் அத்தனைக்கும் அவர் ஒருவரே பொறுப்பு என யாவரும் அறிந்து கொள்வீராக”
– மாரி செல்வராஜ்
புத்தகங்களைப் படித்ததன் அனுபவம் மாரி செல்வராஜ்-க்கு தனது அனுபவங்களை புத்தகமாக எழுதும் எண்ணத்தையும் கொடுத்துள்ளது. அதன்படி தனது கிராமம் பற்றியும், அங்கு நடக்கக்கூடிய அரசியல், சாதிய அடக்குமுறைகள் குறித்தும் ’தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள்’ எனும் சிறுகதைத் தொகுப்பை எழுதியுள்ளார் மாரி செல்வராஜ்.
“சென்னையில் யாரும் எங்கும் செல்லலாம். யாரும் யாருக்காகவும் பயப்பட வேண்டியதில்லை. கூவம் அழுக்காய் மலமாய் நாற்றத்தோடு ஓடினாலும் தாமிரபரணியைக் காட்டிலும் புனிதமானது என்று ஏனோ தோன்றுகிறது… ”
– இயக்குநர் ராம்
’தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள்’ புத்தகத்தின் வாழ்த்துரையில் இயக்குநர் ராம் எழுதியிருக்கும் வரிகள் இது. கிராமத்தை நல்லபடியே வர்ணித்தவர்களுக்கும், அதனை படித்தவர்களுக்கும் இப்பேற்பட்ட வரிகள் ஏமாற்றத்தையே அளிக்கும். ஆனால் அத்தனை வலிமிகுந்த அனுபவங்களை 21 சிறுகதைகளாக கொண்டதே ’தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள்’ எனும் சிறுகதைத் தொகுப்பு.
இந்த புத்தகத்திற்கு பிறகு ஆனந்த விகடனில் ‘மறக்கவே நினைக்கிறேன்’ எனும் தலைப்பில் தான் தொடராக எழுதி வந்ததை புத்தகமாக தொகுத்து வெளியிட்டார் மாரி செல்வராஜ். ’தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள்’ புத்தகத்தைப் போன்றே இதிலும் பல்வேறு கசப்பான சம்வங்களையும், தன்னுடைய வாழ்க்கை அனுபவங்களையும் தொடர்ச்சியாக எழுதியுள்ளார். பரியேறும் பெருமாள் படத்தில் இடம்பெற்ற கதாபாத்திரங்கள், பல்வேறு காட்சிகள் இந்தப் புத்தகத்தில் அவரது அனுபவப் பதிவுகளாக இடம்பெற்றவையே. புத்தகம் முழுக்க அவ்வளவு மனிதர்கள், அவ்வளவு சம்பவங்கள் என எதார்த்தங்களையும் நம் பால்யங்களையும் நினைகூறுகிறார் மாரி செல்வராஜ்.
எங்கிருந்து முளைக்குமோ இத்தனை இன்னல்கள், இன்பங்களோடு கலந்துரைக்கும் அனுபவங்கள்? நினைவலைகளை தன் மனக்கரையோடு மட்டும் நிறுத்திக்கொள்ளாமல், கவிதையாக, கட்டுரையாக, கதையாக நாம் யாவரும் கலந்துரையாட நம் முன் ஒப்படைத்து, அவர் மறக்கவே நினைக்கிறார், நாம் அங்கிருந்து தொடர்கிறோம். ( இந்த சமூகம் நம்மீது நிகழ்த்திட்ட அனுபவங்களை நினைவுக்கூர்ந்து )
மறக்கவே நினைக்கிறேன் புத்தகம் எனது அனுபவத்தில் மறக்க முடியாத பக்கங்கள். இலக்கிய மொழிகள் ஏதுமில்லாமல் எல்லோருக்கும் புரியும் வகையில் எளிய மொழியில் இருந்ததே மாரி செல்வராஜின் 2 புத்தகமும் அதிக வாசகர்களை சென்றடைவதற்கான காரணமாக இருந்துள்ளது. அதோடு வாசர்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி, விவாத்திற்கும் உட்படுத்தியது.
அறிமுக இயக்குநர்
உதவி இயக்குநராக பணிபுரிந்த அனுபவம், எழுத்தாளனாக கிடைத்த வெற்றி, அவருக்கு திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தது. கிட்டத்தட்ட அதே காலகட்டத்தில் விளிம்புநிலை மக்கள் குறித்த படங்களை வெற்றி படமாக்கி கொண்டிருந்த இயக்குநர் பா.ரஞ்சித் நீலம் புரொடக்ஷன் எனும் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கிருந்தார். அதன் மூலம் படம் இயக்கும் வாய்ப்பை பெற்றார் மாரி செல்வராஜ்.
தனது முதல் படத்திலேயே வெற்றி பெற்ற எத்தனையோ இயக்குநர்களுக்கு மத்தியில் மாரி செல்வராஜ்-க்கு எப்போதும் ஒரு தனித்த இடம் உண்டு. ஏனெனில் 2018ல் வெளியான “பரியேறும் பெருமாள் BABL” திரைப்படம் தமிழ் சினிமாவில் அப்படியொரு தாக்கத்தை ஏற்படுத்தி மிகப் பெரிய வெற்றிப்படமாகவும் அமைந்தது. புதுமுக இயக்குநர், புதிய தயாரிப்பு நிறுவனம், என எந்த தடையும் இந்த படத்தின் வெற்றியை தடுக்க முடியவில்லை.
பரியேறும் பெருமாள் BABL
”நீங்க நீங்களா இருக்கற வரைக்கும்… நான் நாயா தான் இருக்கனும்னு நீங்க எதிர்பார்க்குற வரைக்கும் இங்க எதுவுமே மாறாது… இப்டியே தான் இருக்கும்… “
“இப்படி புழு பூச்சி மாதிரி வாழ்ந்து என்னயா பண்ண போறிங்க…. எத்தனாவது தலமுற உங்களோட கெடந்து மாறடிக்க வேண்டியிருக்கு… புள்ளைகள கூப்டுட்டு ஓடுறனு சொல்றிகங்ளே உங்களுக்கு எல்லாம் வெக்கமா இல்ல? …அவனுக பஸ்ஸ ஒடைச்சதுக்கு அடிக்கல. நிமிந்து பாத்ததுக்கு அடிச்சிருக்கானுவ, ஆயுசுக்கு நிமிந்து பாக்காமா வாழ்ந்துருவிங்களா?.. அப்படி வாழ முடியும்னு நெனைக்குறவ இப்பவே இங்க இருந்து போய்டுங்கல உங்கள எவனும் இங்க புடிச்சு வைக்கல … நாங்க இப்ப நிமிந்து பாத்துட்டோம். இனி ஜென்மத்துக்கும் எங்களால குனிய முடியாது. அதனால நாங்க சண்ட போட போறோம்….”
மாமன்னன்
கர்ணன் திரைப்படத்தை தொடர்ந்து, ரெட் ஜெயண்ட் தயாரிப்பில் வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ், உதநிதி ஸ்டாலின், ஆகியோர் நடித்து சமீபத்தில் வெளியான ‘மாமன்னன்’ திரைப்படம் தமிழ் திரையுலகில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம்.
மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு வடிவேலு நடித்துள்ளதாலும், படம் அரசியலை மையப்படுத்திய திரைப்படம் என ஆரம்பம் முதலே கூறியதாலும் இந்த படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு அதிகமாகவே இருந்தது.
மேலும் வடிவேலு நகைச்சுவை கதாப்பாத்திரத்தில் நடிக்கவில்லை என்பதனையும், கிட்டத்தட்ட கதையின் நாயகன் வடிவேலு என்றே கூறினார் மாரி செல்வராஜ். தனது முதல் 2 படங்கள் ஏற்படுத்திய தாக்கமும் அமைச்சராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலின் இதில் நடித்ததாலும் படம் குறித்து தொடர்ச்சியாக பேச்சுகள் வந்துக்கொண்டே இருந்தது.
”ஒருத்தனால திருப்பி அடிக்க முடியாதுன்னு தெரிஞ்சு, அவன திரும்ப திரும்ப நீ அடிக்கறேன்னா அது அயோக்கியத்தனம். உன்னால ஒருத்தன திருப்பி அடிக்க முடிஞ்சும் நீ அவன்கிட்ட திரும்ப திரும்ப அடி வாங்குனா அது கோழைத்தனம்”


































