2 வயதுக்கு உட்பட்ட குழந்தையை தத்தெடுப்பதற்கு என்ன தகுதி? – நீதிமன்றம் விளக்கம்

கணவன் – மனைவி இருவருக்கும் கூட்டு வயது 90-ஐ தாண்டிவிட்டால் 2 வயது குழந்தையை தத்தெடுக்க முடியாது என உயர்நீதிமன்ற மதுரைகிளையில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.   நெல்லையை சேர்ந்த சந்திரசேகர் என்பவர் உயர்நீதிமன்ற…

கணவன் – மனைவி இருவருக்கும் கூட்டு வயது 90-ஐ தாண்டிவிட்டால் 2 வயது குழந்தையை தத்தெடுக்க முடியாது என உயர்நீதிமன்ற மதுரைகிளையில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

 

நெல்லையை சேர்ந்த சந்திரசேகர் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், “தங்களுக்கு குழந்தை இல்லாததால் ஒரு குழந்தையை தத்தெடுக்க தானும், தன் மனைவியும் முடிவு செய்து, விண்ணப்பித்தோம் என தெரிவித்திருந்தார். ஆனால் வயது வரம்பை கடந்துவிட்டதாக கூறி 2 வயது குழந்தையை தத்தெடுக்க அனுமதி மறுத்துவிட்டனர். எங்கள் விருப்பப்படி குழந்தையை தத்தெடுக்க அனுமதிக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.

 

இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில், மனுதாரர் கடந்த 2019-ம் ஆண்டு தத்தெடுப்பதற்கு விண்ணப்பித்தார். அவரிடம் 2 வயது குழந்தைகள் அடுத்தடுத்து காண்பிக்கப்பட்டன. அவற்றில் ஒன்றை தேர்வு செய்ய தவறிவிட்டார். இதற்கிடையே தற்போது அவருக்கும், அவரின் மனைவிக்கும் கூட்டு வயது 90-ஐ தாண்டிவிட்டதால் 2 வயதுக்குட்பட்ட குழந்தையை தத்தெடுக்கும் தகுதியை இழந்துவிட்டனர் என தெரிவித்தனர்.

இதனை பதிவு செய்த நீதிபதி, மனுதாரரின் மனைவி 45 வயதுக்கு குறைவானவர். அவர் தனியாக இருந்து 2 வயது குழந்தையை தத்தெடுக்க தகுதியானவர். ஆனால் அவருக்கு
திருமணமாகி, கணவன்-மனைவியின் கூட்டு வயது 90-ஐ தாண்டியதால் 4 வயதுக்கு மேல் உள்ள குழந்தைகளை மட்டுமே தத்தெடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என கூறினார்.

 

இருந்தபோதும் அவர்கள் 2 வயது குழந்தையை தத்தெடுக்கும் விதிகளில் இருந்து அவர்களுக்கு தளர்வு அளிக்க, சம்பந்தப்பட்ட குழு நடவடிக்கை எடுக்கலாம் என்றும் குழந்தை தத்தெடுப்பது குறித்து மனுதாரர் சம்பந்தப்பட்ட குழுவிடம் மனு அளிக்கலாம் என்றும் கூறினார். அந்த மனுவை பரிசீலித்து உரிய முடிவை 8 வாரத்தில் எடுக்க வேண்டும் என உத்தரவிட்டு நீதிபதி வழக்கை முடித்து வைத்தார்.

 

– இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.